×

சென்னையில் 6 பேருக்கு மேல் கொரோனா தொற்று உள்ள 2,600 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு:10 பேருக்கு மேல் தொற்று உள்ள 850 தெருக்கள் தீவிர கண்காணிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 6 பேருக்கு மேல் கொரோனா தொற்று உள்ள 2,600 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேருக்கு மேல் தொற்றுள்ள 850 தெருக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று எண்ணிக்கை 7,500 ஆக இருந்தது. தற்போது 6 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று 6,073 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று வரை 47,667 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4,62,448 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கடந்த 9ம் தேதி முதல் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 மண்டலங்களில் 22.8% அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. இந்த 5 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளது.

ஒரு தெருவில் 10 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டால், அந்த தெருவை மாநகராட்சி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட மண்டலங்களில் ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 9ம் தேதி வரையில் கொரோனா பாதிப்பு 4 சதவீதமாகவே இருந்தது. தற்போது அது பல மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற மண்டலங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மணலி பகுதியில் நோய் கட்டுப்பாடு பகுதிகள் அதிகரித்துள்ளன. மாதவரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களிலும் நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 177வது வார்டுக்குட்பட்ட வேளச்சேரி பகுதியில் 22 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாகவும், 123வது வார்டுக்கு உட்பட்ட பீமன் பேட்டை பகுதியில் 22 தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் உள்ளன. 175வது வார்டுக்குட்பட்ட அடையாறு பகுதியிலும், 134வது வார்டுக்குட்பட்ட கோடம்பாக்கம் பகுதியிலும் 20 தெருக்கள் நோய் தொற்றால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 9ம்தேதி சென்னையில் நோய் தொற்று அதிகமுள்ள தெருக்கள் பற்றிய கணக்கெடுப்பில் 725 தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்தில் உயர்ந்துள்ளது. கடந்த 17ம் தேதி சென்னை மாநகராட்சி மேற்கொண்ட கணக்கெடுப்பில் நோய் அதிகரித்த தெருக்களின் எண்ணிக்கை 890ஆக உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று சென்னை மாநகராட்சியில் வெளியிட்ட அறிவிப்பில் சென்னையில் 2,600 இடங்கள் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 6 பேருக்கு மேல் தொற்று உள்ள 2,600 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2,600 இடங்களில் 10 பேருக்கு மேல் தொற்று உள்ள 850 தெருக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai , 2,600 places in Chennai with more than 6 corona infected areas declared as control areas: 850 streets with more than 10 infected areas are under intensive surveillance: Corporation officials informed
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...