×

ஓசூரில் பரிதாபம் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த தொழிலாளியின் கண் அகற்றம்'; உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டதால் வேறுவழியில்லை என மருத்துவர் விளக்கம்

ஓசூர்: ஓசூர் தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட தொழிலாளியின் இடது கண் அகற்றப்பட்டது. கருப்பு பூஞ்சை மூளைக்கும் பரவி உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்பதால் வேறுவழியில்லாமல் கண்ணை அகற்றியதாக மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.   தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் வேளையில், புதிதாக கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகளுடன் சென்னை, மதுரை, சேலத்தில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சேலத்தில் நேற்று முன்தினம் மேட்டூர் மற்றும் ஓமலூரைச் சேர்ந்த 2 பேர் கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, இடைப்பாடி, ஓமலூர், ஆத்தூர், மேச்சேரி மற்றும் தாரமங்கலத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 5 பேருக்கு அறிகுறிகள் தென்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓசூரில் தனியார் மருத்துவக்கல்லூரியில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதித்த தொழிலாளியின் இடது கண் மிகவும் மோசமான நிலையை அடைந்தது. நோய் தொற்று மூளைக்கு பரவாமல் தடுப்பதற்காக, அவரது கண்ணை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். இதுகுறித்து, ஓசூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுந்தரவேல் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 45 வயதான கூலி தொழிலாளிக்கு சர்க்கரை நோய் இருந்தது. அவருக்கு கொரோனா இல்லை. ஆனால், கருப்பு பூஞ்சை தொற்று இருந்தது. இதன்காரணமாக, இடது கண் பார்வை குறைய ஆரம்பித்தது.

அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, பூஞ்சை தொற்று காரணமாக அவரது கண் மிகவும் மோசமாகி இருந்தது தெரியவந்தது. உடனடியாக, 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, அவரது இடது கண்ணை மருத்துவர்கள் அகற்றினர். இன்னும் சில நாட்கள் தாமதித்திருந்தால், அந்த கருப்பு பூஞ்சை மூளைக்கும் பரவி, அவர் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்றார் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தை சேர்ந்த 75 வயது முதியவர் உட்பட 3 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



Tags : Hosur , Eye removal of a worker infected with a miserable black fungus in Hosur '; The doctor explained that there was no other option as there was a risk of death
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது