ஜெகன்மோகனை விமர்சித்த விவகாரம்: ஒய்எஸ்ஆர் காங்கிரசின் அதிருப்தி எம்பிக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஆந்திர மாநில முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை அவரது கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடுமையாக விமர்சித்து வந்தார்.  சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பெயிலை ரத்து செய்ய வேண்டுமென கூறியிருந்தார்.  அதைத் தொடர்ந்து, கடந்த 15ம் தேதி ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையால் எம்பி கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு  கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜூ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,” விசாரணையின் போது கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜூ மிகவும் துன்புறுத்தப்பட்டுள்ளார். அவரது உடம்பில் பல இடங்களில் காயம் உள்ளது’’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர மாநில அரசு தரப்பு வாதத்தில்,”யாரும் ராஜூவை துன்புறுத்தவில்லை. அவராகவே தனது உடம்பில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். ராஜூவின் காவலை மேலும் நீட்டித்து ஜாமீன் வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள்,”கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜூ அரசு மற்றும் ராணுவ மருத்துவமனை என இரண்டிலும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளார். அதில் அவரது இடது காலில் முறிவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்த நீதிபதிகள், கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜூவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

Related Stories: