×

கொரோனா 2வது அலை ஜூனில் முடிவுக்கு வரும்: 6-8 மாதத்திற்குப் பின் 3வது அலை தாக்கும்: தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.. மத்திய நிபுணர் குழு அறிவிப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வரும் 29-31ம் தேதிகளில் உச்சத்தை தொடும் என மத்திய நிபுணர் குழு எச்சரித்துள்ளது. கொரோனா 2வது அலை ஜூன் மாதம் குறையும் என்றும், 3வது அலை அடுத்த 6-8  மாதத்திற்குப் பின் தாக்கக் கூடும் எனவும் கணித்துள்ளது. கொரோனா 2வது அலை பாதிப்பு இந்தியாவில் சற்று சரியத் தொடங்கி உள்ளது. பாதிப்பு குறைந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. பாதிப்பு வெகு அதிகமாக இருந்த மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில்  தற்போது வைரஸ் தொற்று குறையத் தொடங்கி உள்ளது. அதே சமயம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தினசரி பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அறிவியல் அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் நிபுணர் குழு கொரோனா பாதிப்பு குறித்த கணித முறைப்படியிலான கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, இம்மாத  இறுதியில் நாடு முழுவதும் தினசரி தொற்று பாதிப்பு 1.5 லட்சமாக குறையும் என்றும், ஜூன் மாதத்தில் தினசரி பாதிப்பு 15,000- 20,000க்கு கீழ் சரிந்து விடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜூலை தொடக்கத்தில் கொரோனா 2வது அலை  முழுவதும் முடிந்து விடும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இக்குழுவில் இடம் பெற்றுள்ள ஐஐடி கான்பூர் பேராசிரியர் மணிந்திர அகர்வால் கூறுகையில், ‘‘மகாராஷ்டிரா, உபி, கர்நாடகா, மபி, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், கேரளா, சிக்கிம், உத்தரகாண்ட், குஜராத், அரியான, டெல்லி, கோவா போன்ற  மாநிலங்கள் ஏற்கனவே கொரோனா 2ம் அலையின் உச்சத்தை சந்தித்து விட்டன. இனி தமிழ்நாட்டில் வரும் 29-31ம் தேதி கொரோனா உச்சத்தை தொடும். மேகாலயாவில் வரும் 30ம் தேதியும், திரிபுராவில் வரும் 26-27ம் தேதியிலும் பாதிப்பு  உச்சத்தை எட்டும்’’ என கூறி உள்ளார்.
இதைத் தொடர்ந்து அடுத்த 6-8  மாதத்திற்குப் பிறகு 3வது அலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறி உள்ளனர். பேராசிரியர் அகர்வால் கூறுகையில், ‘‘வரும் அக்டோபர் வரை 3வது அலை ஏற்பட வாய்ப்பில்லை. எனவே அதற்குள்  நிறைய பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். ஏற்கனவே பலர் தொற்றிலிருந்து குணமடைந்து நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பர். அதே போல தடுப்பூசியின் வேகத்தையும் அதிகரித்தால் 3வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல்  தவிர்க்க முடியும்’’ என்றார்.

மே மாதத்திலேயே அதிக பலி

* கடந்த ஒன்றரை ஆண்டில் அதிகமான கொரோனா பலியை சந்தித்த மாதம் தற்போதைய மே மாதம்தான்.

* இம்மாதத்தின் முதல் 19 நாளில் கிட்டத்தட்ட 75,000 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

* இதற்கு முன் கடந்த ஏப்ரலில் 49,000 பேர் இறந்ததே அதிகபட்ச பலி பதிவான மாதமாக இருந்தது. ஆனால் இம்மாதத்தில் இன்னும் 10 நாட்கள் மீதமிருப்பது குறிப்பிடத்தக்கது.

* கொரோனா முதல் அலையில் மிக மோசமான பலிகளை சந்தித்த மாதம் 2020 செப்டம்பர் ஆகும். அம்மாதத்தில் 33,000 பேர் பலியாகினர்.

தவறிய கணிப்பு

கொரோனா 2வது அலை இவ்வளவு தீவிரமடையும் என்பதை கணிக்கத் தவறியதை இக்குழு ஒப்புக் கொண்டுள்ளது. குழுவில் உள்ள ஐஐடி ஐதராபாத் பேராசிரியர் வித்யாசாகர் கூறுகையில், ‘‘கொரோனா 2வது அலையில் தினசரி பாதிப்பு  அதிகபட்சம் 1.5 லட்சமாக இருக்கும் என கணித்திருந்தோம். ஆனால் அது தவறாகி விட்டது. 2வது அலை இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கத் தவறியதை ஒப்புக் கொள்கிறோம்’’ என்றார்.



Tags : Corona ,Central Expert Panel , Corona 2nd wave ends June: 3rd wave after 6-8 months: Vaccination should be speeded up .. Central Expert Panel announcement
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...