×

உரிமை கோராத சடலங்கள் டீசல் ஊற்றி எரிப்பு: உ.பி-யில் 5 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உரிமை கோரப்படாத சடலங்களை போலீசார் டீசல் ஊற்றி எரித்த விவகாரத்தில் 5 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கொரோனாவின் இரண்டாவது அலையால், பீகார், உத்தரபிரதேச மாநிலத்தில் பாயும்  கங்கை நதியில் சடலங்கள் மிதப்பதும், கங்கை கரையோர சுடுகாடுகளில் சடலங்கள்  எரிவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்லியா மாவட்டத்தில் உள்ள  மால்தேபூர் சுடுகாட்டின் கரையில் மூன்று சடலங்கள் கிடந்தன. அவற்றை நாய்கள் கீறிவிட்டு சாப்பிடுகின்றன. மேலும், இறந்த சடலங்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை.

அதனால், அந்த சடலங்களை கங்கா சுடுகாட்டில் வைத்து போலீசார் எரித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், போலீசார் சிலர் இறந்த உடல்களை தகனம் செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தகனம் செய்யும் போது, சடலங்களின் மீது டீசலை ஊற்றி லாரியின் பழைய டயரை அதன் மீது போட்டு எரிக்கின்றனர். வீடியோ வைரலானது குறித்து பல்லியா ேபாலீஸ் எஸ்பி விபின், இறந்த உடல்களை டீசலை ஊற்றி டயர் வைத்து எரித்த ஐந்து போலீஸ்காரர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இறந்த உடல்களை மரியாதையுடன் தகனம் செய்ய வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்கள் உள்ளன.

பிணக்கிடங்கில் உரிமை கோராத உடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவை அழுகி வருவதாலும், கரையில் கேட்பாரற்று கிடந்ததால் அவற்றை எரித்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்த உடல்களை எரிக்க மரக்கட்டைகள் இல்லை என்றும், அதனால் டீசலை ஊற்றி எரித்ததாகவும் கூறினர். இருந்தும் விதிமுறை மீறி செயல்பட்ட 5 போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்’ என்றார்.



Tags : UP , Unclaimed corpses burnt with diesel: 5 policemen suspended in UP
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...