×

டெல்டா சாகுபடிக்கு ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு?

தஞ்சை: ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பாணை வெளியிடுவார் என்று தஞ்சையில் விவசாயிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மேட்டூர் அணை திறப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் தொடர்பாக விவசாய சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண். உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், வேளாண்மை-உழவர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் கோபால், கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கரூர் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். விவசாயிகளிடமிருந்து மனுக்களை பெற்ற பின்னர் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: தலைவர் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது காவிரியின் உரிமைக்காக குரல் கொடுத்தது மட்டுமின்றி கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

முதல்வர் ஆன பிறகு காவிரி நடுவர் மன்றம் அமைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிடம் எடுத்து கூறி நடுவர் மன்றத்தையும் அமைத்து, இடைக்கால தீர்ப்பையும், பின்னர் இறுதி தீர்ப்பையும் பெற்று தந்தார். அதற்கு பிறகு வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள்  அறிவீர்கள். ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க வேண்டும் எனவும், சிறப்பு தூர்வாரும் பணிகளை செம்மைப்படுத்தி விடுபட்ட பகுதிகளை தூர்வார முன்னரிமை வழங்க வேண்டும் என பல்வேறு சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளதோடு மனுக்களையும் வழங்கியுள்ளனர். உலகிலேயே மிகச் சிறந்த நீர்பாசன முறை காவிரி டெல்டா பகுதியில் மட்டுமே உள்ளது.

இதை பராமரிப்பு செய்ய காலியாக உள்ள பொறியாளர்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இங்கு நீங்கள் தெரிவித்த கருத்துக்கள், கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்வரின் பார்வைக்கு எடுத்து சென்று அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கடைமடை வரை எல்லா பகுதிகளுக்கும் தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் சிறப்பாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் நலனுக்காக இந்த அரசு அனைத்து திட்டங்களையும் முறையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தும். மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பாணை வெளியிடுவார்.

அதேபோல் தூர்வாரும் பணி தொடர்பாக நிதித்துறைக்கு உரிய திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆனாலும் கொரோனா தொற்று காலமாக இருப்பதாலும் துறை சார்ந்த குறைபாடுகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து களையப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் எம்.பி.க்கள் தஞ்சை எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மயிலாடுதுறை ராமலிங்கம், நாகப்பட்டினம் செல்வராஜ், எம்பி சண்முகம், கலெக்டர்கள் திருச்சி திவ்யதர்ஷினி, திருவாரூர் சாந்தா, நாகப்பட்டினம் டாக்டர்.பிரவீன் பி.நாயர், அரியலூர் ரத்னா, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அன்பழகன், நீலமேகம், பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, அண்ணாதுரை, அசோக்குமார், ஜவாஹிருல்லா, முகமது ஷாநவாஸ், மாரிமுத்து, ராஜ்குமார், மாலி, கண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எடப்பாடி சுயநலத்துடன் துவங்கியது தான் சரபங்கா உபரிநீர் திட்டம்: விவசாயிகள் குற்றச்சாட்டு
அமைச்சர் துரைமுருகனிடம் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு , கோனேரிராஜபுரம் விவசாய சங்க பிரதிநிதி வீரராஜேந்திரன், நசுவினிஆறு படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்கம் தலைவர் வீரசேனன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: வரும் ஜூன் 12ம் தேதி சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறந்து சாகுபடியை மேற்கொள்வதற்கு உடனடி அறிவிப்பு செய்ய வேண்டும்.

மேலும் சாகுபடிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும். காவிரி டெல்டாவை அழிக்கும் உள்நோக்குடன் விவசாயிகள் கருத்தறியாமல் அவசர கோலத்தில் சுயநல நோக்குடன் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அமல்படுத்திய மேட்டூர் அணை சரபங்கா உபரிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதில் முறைகேடுகளை விசாரிக்க விசாரணை குழு அமைக்கவும் வேண்டும். கல்லணை கால்வாய் மறுசீரமைப்பு பணியில் ஆறுகள் முழுமையும் தரைதளம், பக்கவாட்டு சுவர்கள் சிமெண்ட் கான்கிரீட் மூலம் அமைக்கப்பட்டு நீர் செறிவூட்டும் திட்டங்களை இணைத்து செயல்படுத்த வேண்டும். நெல்லுக்கு லாபகரமான விலை கிடைக்க உதவிட வேண்டும்.

1 டன் கரும்புக்கு பிரதமர் மோடி தருவதாக கூறியது ரூ.8400. ஆனால் தற்போது தருவது ரூ.2850 மட்டுமே. எனவே லாபகரமான விலையை தர வேண்டும். மேலும் சர்க்கரை ஆலைகளிலிருந்து வர வேண்டிய நிலுவை தொகை ரூ.1000 கோடிகளை பெற்றுத் தர வேண்டும். குடமுருட்டி ஆறு பாசன கட்டமைப்பை விரிவாக்கம் செய்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தில் 145 ஏக்கர் நிலங்களுக்கு நீர்பாசன வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பட்ட குறுவை சாகுபடியை காலத்தில் செய்வதற்கு மேட்டூர் அணையை வரும் ஜூன் 12ம் தேதி திறக்க வேண்டும்.

உரவிலையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உரத்திற்கான மானியத்தை உரம் வாங்கும் விவசாயிகளின் வங்கி கணக்கில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

Tags : Matteur Dam ,Delta , Mettur Dam to open on June 12 for delta cultivation?
× RELATED மேட்டூர் அணையில் இருந்து காவிரி...