×

மக்களுக்கு இனி நேரடி விற்பனை இல்லை: தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் சப்ளை: விற்பனை மையங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

சென்னை: ரெம்டெசிவிர் விற்பனை மையங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பொதுமக்களுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யும்  நடைமுறை நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இனி அந்தந்த மருத்துவமனை மூலமாகவே ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் நடைமுறை தொடங்கும். மருத்துவமனையின்  பிரதிநிதிகளே விற்பனை மையத்துக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு புதுப்புது கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இதேபோல், கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை  செய்து வருகின்றனர். இதனால், ரெம்டெசிவிர் மருந்து வாங்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. இதேபோல், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதாகவும் புகார் எழுந்தது. இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது  குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச்  செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்துகொண்டனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும்,  சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக  நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.  

நமது நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே இவ்வாறு நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினரிடம் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.  இந்தநிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில் அதிக கூட்டம் கூடுவதால்,  சமூக இடைவெளியை கடைபிடிக்கமுடியாத சூழல் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால் அதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது.  இங்கு மருந்துகளைப் பெறுவோர் சிலர், அவற்றைத் தவறான முறையில் அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது குறித்த புகார்களும் வந்துள்ளன.  மேலும்,  ரெம்டெசிவிர் மருந்து ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள  நோயாளிகளுக்கு மட்டுமே சிறிது பலன் தருவதாகவும், மற்ற நோயாளிகளுக்கு இதனால் பெரிய அளவில் பலன் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

மேற்கூறிய காரணங்களைக் கருத்தில்கொண்டும், பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர்  அறிவுறுத்தினார்.  மேலும், நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இந்த மருந்தை வாங்குவதற்கான சீட்டை அளித்து, அவர்களை வாங்கிடப் பணிக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன்படி, வருகிற 18ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை  குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி  ஏற்படுத்தப்படும்.

 இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை  மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம்.  இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச் சந்தையில் இவை  விற்பனை செய்யப்படாதவாறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.  நோயாளிகளுக்குத் தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீதும், மேற்கூறிய  விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொள்ளும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


* தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை 18ம் தேதி நடைமுறைக்கு வருகிறது.

* நோயாளிகளுக்குத் தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

* மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

* அரசு விற்கும் விலையிலேயே நோயாளிகளுக்கு மருந்து விற்பனை செய்ய வேண்டும்.

Tags : Government of Tamil Nadu , No more direct sales to the public: Remtecivir supply to private hospitals: Government of Tamil Nadu takes action to avoid overcrowding at sales outlets
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...