இருபெரும் தலைவர்கள் மறைந்ததால் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்றனர்: மு.க.ஸ்டாலின் முதல்வரானதன் மூலம் அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டிருக்கிறது: துணை சபாநாயகர் பிச்சாண்டி பேச்சு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதற்கு நன்றி தெரிவித்து கு.பிச்சாண்டி சட்டப்பேரவையில் பேசியதாவது: மே 7ம் தேதி தமிழக அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கக் கூடாது என்பதற்காக பதவியேற்பு நிகழ்ச்சியை மிக  எளிமையான முறையில் நடத்தி, பதவியேற்றார் நம் முதல்வர். பதவியேற்றவுடன் 5 முத்தான திட்டங்களை பொதுமக்களுக்கு அறிவித்தார்.

புகழுரை, பொய்யுரை கூடாது, ஒளிவு மறைவின்றி உண்மைகளை கூற வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியது,  ஒவ்வொரு பிரச்னை குறித்தும் ஆழமாக யோசித்து முடிவு செய்யும் ஞானம், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவை அதிகரித்து தர வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டு பெற்ற உரிமை,  பதவியேற்ற நாள் முதல் ஓய்வின்றி உழைப்பு இப்படி பன்முகத்தன்மை கொண்ட முதல்வர் பணியாற்றும் பேரவையில் துணை சபாநாயகராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு உள்ளபடியே பெருமை அடைகிறேன்.

இந்த பேரவையில் பல முறை தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறீர்கள், முதன் முறையாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறீர்கள். எனவே, பேரவையின் மரபுகளை நன்கு அறிந்த உறுப்பினர்கள் இளையவர்களுக்கு நிச்சயம்  வழிகாட்டுதலாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் பிரச்னைகளை பேரவையில் எடுத்துரைப்பதோடு ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கப்படும்போதுதான் ஜனநாயகம் வலுப்பெறும் என்று கலைஞர் கூறுவார்.  ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும் வகையில் விவாதம் அமைய வேண்டும் என்பதிலே மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கலைஞர். எனவே அதற்கேற்ப பேரவையில் விவாதங்கள் அமைய என்னால் முடிந்த முயற்சிகளை செய்வேன். பேரவை  தலைவருக்கு உறுதுணையாக இருப்பேன்.

தமிழகத்தில் இருபெரும் தலைவர்கள் மறைந்து விட்டார்கள், இங்கே வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று பலரும் தெரிவித்தனர். அந்த வெற்றிடம் இன்றைக்கு மக்களால் அது மு.க.ஸ்டாலின்தான் என்று நிரப்பப்பட்டிருக்கிறது. அவர் மக்களின்  தலைவராக இன்று முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>