இந்தியா மட்டுமல்ல பிரேசில், மெக்ஸிகோவிலும் மோசம்: முன்னுரிமை பட்டியலில் ஆக்சிஜன் இல்லாதது ஏன்?.. உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்

ஜெனிவா: இந்தியா மட்டுமின்றி பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் முன்னுரிமை பட்டியலில் ஆக்சிஜன் இல்லாதது தான் காரணம் என்று, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து வருகின்றனர். ஏழை நாடுகளில் மருத்துவ பயன்பாட்டிற்கு தேவையான ஆக்சிஜன் விநியோக முறையோ, அமைப்போ இல்லை.

அதனால், ஏழை நாடுகளின் தொலைதூர பகுதிகளில் உள்ள நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் உலகளாவிய அமைப்பான யுனைட்டின் திட்ட இயக்குனர் ராபர்ட் மாட்டிரு கூறுகையில், ‘உலகளாவிய தொற்றுநோய்களின் போது, மருத்துவ ஆக்சிஜன் சப்ளை அரசாங்கங்களின் முன்னுரிமை பட்டியலில் இல்லை. அதனால், ஆக்சிஜனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் ஆக்சிஜன் பற்றாக்குறை பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், வடக்கு பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை அபாயகரமானதாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து அவசர பணிக்குழுவையும் அமைத்தது. கடந்த இரண்டு மாதங்களில், உலகளவில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையானது ஒவ்வொரு நாளும் 90 மில்லியன் கன மீட்டரிலிருந்து, மூன்று மடங்கு அதிகரித்து 288 மில்லியன் கன மீட்டராக அதிகரித்துள்ளது. மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவையை தற்போது பூர்த்தி செய்ய முடியவில்லை. இதில், பாதியளவு இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலை வேறு எந்த நாடுகளிலும் வரக்கூடும்’ என்றார். இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், ‘மருத்துவமனைகளில் பிஎஸ்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும். அங்கிருந்து நோயாளியின் படுக்கைக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல குழாய்களை நிறுவ வேண்டும்.

இன்றைய நிலையில், பிஎஸ்ஏ தொழிற்நுட்பம் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உலகளவில் அதன் உற்பத்தியை அதிகரித்துள்ளன. ஆனால், பணக்கார நாடுகளில் உள்ள மருத்துவமனைகள் திரவ ஆக்சிஜனை வழங்கும் டேங்கர்களை மட்டுமே நம்பியுள்ளன. இவை பெரிய கொள்கலன்களில் சேமிக்கப்பட்டு, குழாய்கள் வழியாக ஒவ்வொரு படுக்கைக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. பல நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் குழாய்கள் மூலம் ஆக்சிஜனை கொண்டு செல்ல வசதிகள் இல்லாததால், மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதற்கு மாற்றாக ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இதில் நிரப்பப்படும் ஆக்சிஜன், திரவ ஆக்சிஜனை விட பத்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது’ என்றனர்.

Related Stories: