‘ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம்தான்’- செரீனா வில்லியம்ஸ் பேட்டி

ரோம்: ‘டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் நான் பங்கேற்பது சந்தேகம்தான்’ என்று அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தற்போது ரோமில் நடந்து வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஆடி வருகிறார். கடந்த பிப்ரவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாமில் செரீனா வில்லியம்ஸ், செமி பைனல் வரை முன்னேறினார். செமி பைனலில் அவர், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்தார். அதன் பின்னர் 2 மாத காலத்திற்கும் மேலாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர், தற்போது இத்தாலி ஓபன் டென்னிசில் பங்கேற்று ஆடி வருகிறார்.

மகளிர் தரவரிசையில் தற்போது 8ம் இடத்தில் உள்ள செரீனா, இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் 23 முறை பட்டம் வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டுக்காக 4 முறை தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ரோமில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘ரோமில் ஆடுவது ஒரு அற்புதமான அனுபவம். வரும் 23ம் தேதி பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், ரோமில் நடந்து வரும் இப்போட்டி, அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறந்த பயிற்சிகளமாக உள்ளது. வரும் ஜூலையில் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் என்னால் பங்கேற்க முடியாது என்று நினைக்கிறேன்.

என்னுடைய மகள் ஒலிம்பியாவுக்கு தற்போது 3 வயது ஆகிறது. அவளை நான் 24 மணி நேரத்திற்கு மேலாக பிரிந்து இருந்ததில்லை. உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழ்நிலையில், எனது மகளை டோக்கியோவுக்கு அழைத்து செல்ல முடியாது. அதனால் இந்த ஒலிம்பிக் போட்டியில் நான் கலந்துகொள்வது சந்தேகம்தான். தவிர அடுத்தடுத்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கும் தயாராக வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: