விவசாயிகள் போராட்டம் நடத்தும் திக்ரி எல்லையில் பெண் பலாத்காரம்: பாதிக்கப்பட்டவர் கொரோனாவால் பலி

புதுடெல்லி: டெல்லியின் திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவர் கொரோனா தொற்றால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியின் சிங்கு, திக்ரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேற்குவங்கத்தை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் ஒருவர், டெல்லி எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அந்த பெண் திக்ரி எல்லையில் சில நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், பின்னர் அவர் கொரோனா தொற்றால் அரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லியின் திக்ரி எல்லையில் விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தி வந்த பெண்ணை, சிலர் தாக்கியுள்ளனர். அதில் அவருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் பகதூர்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்’ என்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், ‘எனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மே 8ம் தேதி அரியானா காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நேர்மையாக விசாரணையை நடத்த வேண்டும்’ என்றார்.

Related Stories:

>