×

அவசரமில்லாத அறுவை சிகிச்சையை ஒத்திவைத்து அரசு, தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜனை சேமிக்க வேண்டும்: மருத்துவ சேவைகள் இயக்குனர் சுற்றறிக்கை

சென்னை: அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை ஒத்திவைத்து ஆக்சிஜனை சேமிக்க அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் குருநாதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறம் ஆக்சிஜன் வசதிகளுக்கும் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் பல கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில் ஆக்சிஜன் வசதிகளை தேவையின்றி பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் மருத்துவ சேவைகள் இயக்ககம் சில அறிவுறுத்தல்களை மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பாக மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் குருநாதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு:  தற்போது நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவமனைகளிலும் குறைந்தபட்சம் 50 சதவீதம் படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்குமாறும், சாதாரண பாதிப்புகளுக்கு மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பதை தவிர்க்குமாறும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. மாநிலத்தில் உள்ள ஆக்சிஜன் வசதிகளை முறையாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியம். அந்த வகையில் அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை ஒத்திவைப்பதன் மூலம் அதற்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை சேமிக்கலாம். இந்த உத்தரவை அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Director of Medical Services , Government, private hospitals should save oxygen by postponing non-emergency surgery: Director of Medical Services Circular
× RELATED கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில்...