×

புதிய கலெக்டர் அலுவலகத்தில் கருணாநிதி திறந்து வைத்த பெயர் பலகை, கல்வெட்டு அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக மறைப்பு: மீண்டும் அமைக்க கோரிக்கை

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பழைய கலெக்டர் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், கடந்த திமுக ஆட்சியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 4 தளங்களுடன், 2 லிப்ட் வசதி, குடிநீர் வசதியுடன் விசாலமாக பிரம்மாண்டமாக திருச்சி மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். கலெக்டர் சவுண்டையா, போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதிய கலெக்டர் அலுவலகம் போர்ட்டிகோவில் திறப்பு விழா பெயர் பலகை அமைக்கப்பட்டது.

சுற்றுச்சுவரில் திறப்பு விழா கல்வெட்டும் பதிக்கப்பட்டிருந்தது. பெயர் பலகை, கல்வெட்டு ஆகியவற்றில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், கலெக்டர் சவுண்டையா, அமைச்சர் கே.என்.என் நேரு ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. புதிய கலெக்டர் அலுவலகத்தை பார்த்து பிரம்மித்து, பாராடாட்டதவர்களே இல்லை. இந்நிலையில், 2011 பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களில் உள்ள பெயர் பலகை அகற்றும் பணியில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேற்கொண்டது. சென்னையில் திமுக ஆட்சியில் ரூ.1000 கோடியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையாக மாற்றினார்.

அதை தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலக வரவேற்பறையில் இருந்த பெயர் பலகையை அதிகாரிகள் மறைத்தனர். திறப்பு விழா பெயர் பலகையிலிருந்த சுவரையொட்டி பெரிய காட்போர்டு பலகை கொண்டு மறைத்தனர். தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரில் கல்வெட்டு இருந்த பகுதி மட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கேட்டபோது, மழையால் இடிந்து விழுந்ததாகவும், சுற்றுச்சுவர் சரி செய்து மீண்டும் கல்வெட்டு வைக்கப்படும் என்று மட்டும் அதிகாரிகள் பதிலளித்தனர். ஆனால், இதுவரை அங்கு கல்வெட்டு வைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கட்டிடங்கள் அலங்கோலமாக்கும் முயற்சியிலும், பெயர் பலகைகளை மாற்றும் முயற்சியிலும் அதிமுக ஆட்சியாளர்கள் குறியாக இருந்தனர். இதை யாரும் கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை.

10 ஆண்டுகள் கழித்து தற்போது திமுக ஆட்சி அரியணையில் ஏறியிருக்கிறது. சென்னையில் நேற்று அம்மா உணவக விவகாரத்தில் திமுகவினரை ஒரு மணி நேரத்தில் கட்சியிலிருந்து நீக்கி, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிழித்த பேனரை ஒட்டவும் உத்தரவிட்டது பாராட்டுகளை குவித்து வருகிறது. அதே வேளையில் திருச்சி கலெக்டர் அலுவலக திறப்பு விழா பெயர் பலகை, கல்வெட்டை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Karunanidhi ,'s ,AIADMK , AIADMK
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...