×

கொல்லிமலை அடிவாரப் பகுதியில் தோப்புகளை குத்தகைக்கு எடுக்க தயக்கம் காட்டும் வியாபாரிகள்: மரத்திலேயே வீணாகும் மாங்காய்கள்

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளி, பள்ளம்பாறை, புளியங்காடு, முத்துகாபட்டி, கோம்பை, போடிநாயக்கன்பட்டி, பண்ணக்காரன்பட்டி, சின்னபள்ளம்பாறை, வால்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாமரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையும் செந்தூரா, கிளிமூக்கு, பங்கனபள்ளி, அல்போன்சா, மேளம்,சேலம் குண்டு, பெங்களூரா உள்ளிட்ட ரக மாம்பழங்கள் மிகவும் சுவை கொண்டது.

கொல்லிமலை அடிவாரப் பகுதியில் விளையும் மாங்காய் என்பதால், இதனை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுவார்கள். திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள், இங்குள்ள தோப்புகளை குத்தகைக்கு எடுத்து மாங்காய்களை பறித்து, வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக சேந்தமங்கலம் பகுதியில் ஏராளமான மாங்காய் மண்டிகள் உள்ளது.

இந்நிலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மாமரங்கள் பூக்கள் விட்டு மாசி, பங்குனி மாதங்களில் மாங்காய் அறுவடை செய்யப்படும். ஆனால் இந்தாண்டு பருவம் மாறி, கார்த்திகை மாதத்தில் பெய்த மழையின் காரணமாக பூக்கள் அனைத்தும் கீழே கொட்டி விட்டது. இதனால் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பெய்த பனி காரணமாக, இரண்டாம் பருவத்தில் பூக்கள் பிடித்த மாமரங்கள், தற்போது மாங்காய்கள் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மாங்காய் பறித்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாங்காய் பறிக்க கூலி ஆட்கள் வருவதில்லை. இதன் காரணமாக தோப்புகளை வியாபாரிகள் குத்தகைக்கு எடுக்க முன்வரவில்லை. சரியான தருணத்தில் பறிக்க வேண்டிய மாங்காய்கள், மரத்திலேயே பழுத்து கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் இதை சேகரித்து அப்பகுதியிலேயே கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்கின்றனர். முழுமையாக விற்பனை செய்ய முடியாததால், இந்தாண்டு மா விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Tags : Killimayan , Kollimalai, merchants, birds
× RELATED கொல்லிமலை அடிவாரம் செக்போஸ்டில்...