×

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிந்ததையொட்டி தேனியில் மாணவ, மாணவியர் உற்சாகம்

தேனி, ஏப். 4: தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிந்ததையடுத்து மாணவ, மாணவியர் உற்சாகமாக தேர்வு மையங்களில் இருந்து ஒருவர் மீது ஒருவர் மையைத் தெளித்து கொண்டு உற்சாகமாக சென்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 13ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது. இத்தேர்வு நேற்றுடன் (3ம்) நிறைவடைந்தது. தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வினை 142 அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி, தனியார் சுயநிதிப்பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 38 மாணவர்கள், 7 ஆயிரத்து 514 மாணவியர் என மொத்தம் 15 ஆயிரத்து 552 மாணவ, மாணவியர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இதுதவிர தனியார் தேர்வர்களாக 260 பேர் தேர்வுஎழுத அனுமதிக்கப்பட்டனர். இத்தேர்வுக்காக மாவட்ட அளவில் 56 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வு மையங்களை கண்காணிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள்,
ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், தேர்வுகள் துறை உதவி இயக்குநர், உதவி திட்ட அலுவலர் ஆகியோர் கொண்ட 6 பறக்கும் படைகளும், நிலையான 160 பேர் கொண்ட கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டு தேர்வு கண்காணிக்கப்பட்டது. தேர்வு நடக்கும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிகபட்சமாக சுமார் ஆயிரம் பேர் வரை ஆப்சென்டாகிய நிலையில் நேற்று அனைத்து பாடத் தேர்வுகளும் நிறைவடைந்தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து கடந்த ஒரு மாத காலமாக தேர்வு டென்சனில் இருந்த மாணவ, மாணவியர் தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் நேற்று தேர்வு முடிந்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வரும்போது, மை பேனாக்களில் இருந்து ஒருவருக்கொருவர் சட்டைகளில் மையைத் தெளித்து மகிழ்ச்சியை பரிமாறியபடி சென்றனர்.

The post பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிந்ததையொட்டி தேனியில் மாணவ, மாணவியர் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...