×

ராஜபாளையம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் மா மகசூல் பாதிப்பு: நிவாரணம் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு

விருதுநகர், ஏப்.4: பருவநிலை மாற்றத்தால் மா மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், செண்பகத்தோப்பு, வத்திராயிருப்பு, மம்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 11 ஆயிரம் ஏக்கர்களில் பஞ்சவர்ணம், சப்பட்டை ரக மாம்பழ விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆயிரக்கணக்கான விவசாய கூலித் தொழிலாளர்கள் மா விவசாயத்தை நம்பி உள்ளனர். ராஜபாளையம் மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற வேண்டுமென விவசாயிகள் கோரி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும். ராஜபாளையம் பகுதியில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுக்கும் மாம்பழங்கள் அனுப்பப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு பராமரிப்பு, உரம், பூச்சி மருந்துகள் செலவினமாக ரூ.60 ஆயிரம் வரை செலவிட்டால், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை மாமரங்களில் இருந்து வருமானம் கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு மா மரங்கள் நன்கு பூத்து குலுங்கியதால், மாங்காய் விளைச்சல் அதிக அளவில் இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக ராஜபாளையம், செண்பகத்தோப்பு, திருவில்லிபுத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் வெயில் கடுமையாக உள்ளது. வெயிலின் தாக்கத்தால் மா மரங்களில் இருந்து பெரும்பாலான பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன.

இதனால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள விவசாயிகள், நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு, குட்டதட்டி செண்பகத்தோப்பு வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வந்தனர். தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இது தொடர்பாக விவசாயிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை ஆலோசனையின் பேரில் மா பராமரிப்பு செய்து வருகிறோம். திடீரென மா மரங்களில் இருந்து பிஞ்சுகள், பூக்கள் உதிர்ந்து விழுந்து மகசூல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலைய வல்லுநர்கள் நேரில் ஆய்வு செய்தனர். பருவநிலை மாற்றம்தான் மகசூல் இழப்புக்கு காரணம் என கூறி விட்டனர்.

இன்சூரன்ஸ் செய்யப்படாத நிலையில் அனைத்து விவசாயிகளும் கடுமையாக இழப்பீட்டை சந்தித்துள்ளனர். தமிழக அரசு மா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர். விவசாயி ராமச்சந்திர ராஜா கூறுகையில், ‘ராஜபாளையம், மம்சாபுரம், செண்பகத்தோப்பு பகுதிகளில் மா விவசாயத்தை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். பருவநிலை மாற்றத்தால் ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் பெற்றுத் தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். மா பயிருக்கான இன்சூரன்ஸ் ஏற்பாடுகள் செய்ய விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் கவனக்குறைவால் மறந்து விட்டனர். இன்சூரன்ஸ் செய்திருந்தால் உரிய இழப்பீடு கிடைத்திருக்கும்’ என்று தெரிவித்தார்.

The post ராஜபாளையம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் மா மகசூல் பாதிப்பு: நிவாரணம் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு appeared first on Dinakaran.

Tags : Rajapalayam, Vathrairipu ,Virudhunagar ,Rajapalayam ,Vathirairipu ,Dinakaran ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு