×

தள்ளாத வயதிலும் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்: பெரம்பலூர் கலெக்டர் பாராட்டு

பெரம்பலூர், ஏப்.4: தள்ளாத வயதிலும் தெருத் தெருவாக யாசகம் பெற்ற நிதி ரூ.10 ஆயிரத்தை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய தூத்துக்குடி யாசகரை கலெக்டர் பாராட்டினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா, ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன்(73). குடும்பத்தினர் கைவிட்ட நிலையில் ஆதரவின்றி இருந்தவர், பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார். இவ்வாறு யாசகம் பெறக்கூடிய பணத்தை தான் எந்த மாவட்டத்தில் இருக்கிறாரோ அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர்கள் மூலம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி வளர்ச்சிக்காகவும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை நன்கொடையாக வழங்கி வருகிறார்.

இவ்வாறு கடந்த 2010ம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக ரூ.55 லட்சம் மதிப்பில் தமிழக அரசு பொது நிவாரண நிதிக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் தானமாக வழங்கியுள்ளார். இவரை தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுக்காவை சேர்ந்த பள்ளிகளில் கல்வி தாத்தா என கௌரவமாக அழைக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்தபோது மதுரை மாவட்ட கலெக்டரிடம் ரூ.20,000 நன்கொடையாக வழங்கினார். இதுபோல் சிவகாசி வெடி விபத்து, இலங்கை தமிழர் நிவாரணஉதவி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நிவாரண உதவி, வெள்ள நிவாரண உதவி என பல்வேறு நிதிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டிடி எடுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பூல்பாண்டியன் தமிழக முதல் வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.20,000யை வழங்க பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்று அனுப்பிவிட்டு அந்த தகவலை மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் வந்து தெரிவித்தார். யாசகம் செய்து கிடைக்கும் பணத்தை 55 லட்சத்திற்கு மேல் பொது நிவாரண நிதிக்கவும், பள்ளி மாணவ, மாணவியர் நல ன்களுக்காகவும் பல்வேறு உதவிகளுக்காகவும் மனமுவந்து அளித்து வருவதற்காக சால்வை அணிவித்து கௌரவம் செய்து பாராட்டு தெரிவித்தார்.

The post தள்ளாத வயதிலும் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்: பெரம்பலூர் கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tamil Nadu ,Chief Minister ,Yasakam ,
× RELATED கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 400 மது பாட்டில்கள் பறிமுதல்