×

தலைமை செயலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு: இலவச வீடு கிடைப்பதை தடுத்துவிட்டதாக கதறல்

சென்னை: சென்னை தலைமை செயலகம் முன்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். உரிய நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டனர். இலவச வீடு கிடைப்பதை ஊராட்சி தலைவர் தடுத்து விட்டதாக பரபரப்பு குற்றம் சாட்டினார். சென்னை தலைமை செயலகம் வழக்கம்போல் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. அப்போது, பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் கையில் பையுடன் வந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மாற்றுத்திறனாளி மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர்.

பிறகு அவரை கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் மாற்றுத்திறனாளியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் அரசுப்பட்டு கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி (48) என்றும், பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடு ஒதுக்கீடு கிடைக்க பெற்றதாகவும், அதை கிராம பஞ்சாயத்து தலைவர் சங்கர் என்பவர் தனது அதிகாரம் மூலம் கிடைக்காமல் செய்துவிட்டதாகவும் கூறி அழுத்தார். எனவே, மனமுடைந்து தலைமை செயலகம் முன்பு தற்கொலைக்கு முயலும் வகையில் தீக்குளிக்க முயன்றதாக கூறினார்.

அதைதொடர்ந்து கோட்டை போலீசார் மாற்றுத்திறனாளியிடம் அவரது கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகம் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தலைமை செயலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு: இலவச வீடு கிடைப்பதை தடுத்துவிட்டதாக கதறல் appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Chief Secretariat ,CHENNAI ,
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...