×

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஹரிபத்மன் கைது: சென்னையில் தோழி வீட்டில் பதுங்கியிருந்தபோது சிக்கினார்

சென்னை: கலாஷேத்ரா மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த வழக்கில் தோழி வீட்டில் ரகசியமாக பதுங்கி இருந்த பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. ஒன்றிய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரியில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பயின்று வருகின்றனர். நடன கல்லூரி என்பதால் கல்லூரியில் ‘இசைக்கு ஏற்றப்படி நடன அசைவுகள்’ கற்றுத் தரப்படுகிறது.

பல நேரங்களில் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி என்ற பெயரில் பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் உதவி நடன கலைஞர்களான சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், நாத் ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், மாணவிகளின் குற்றச்சாட்டு மீது கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்ைல. இதனால் மாணவிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடந்த வாரம் கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் வந்து மாணவிகளிடம் பொது வெளியில் விசாரணை நடத்தினார். தொடர் பாலியல் தொந்தரவு அளித்து வரும் பேராசிரியர்கள் உள்பட 4 பேர் மீதும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தேசிய மகளிர் ஆணைய தலைவர் உதாசீனப் படுத்தியதாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து மாணவிகள் பாலியல் தொந்தரவு அளித்து வரும் 4 பேரை கைது செய்யக் கோரி கல்லூரி வளாகத்தில் இரவு-பகலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி கடந்த வெள்ளிக்கிழமை கலாஷேத்ரா கல்லூரியில் உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, குற்றம்சாட்டிய 12 மாணவிகளிடம் தனித்தனியாகவும், பேராசிரியரால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் 5 பேரிடம் வீடியோ கால் மூலமும் விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தார்.

அப்போது மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேராசிரியர் ஹரிபத்மன் மூலம் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கோரினார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மாணவிகளுடன் கலாச்சார விழாவுக்கு ஐதராபாத் சென்று இருந்த பேராசிரியர் ஹரிபத்மனுக்கு செல்போன் மூலம் நேரில் ஆஜராக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேராசிரியர் நேரில் வருவதாக உறுதி அளித்து இருந்தார். ஆனால், நேற்று முன்தினம் சொன்னபடி அதிகாலை ஐதராபாத்தில் இருந்து ரயில் மூலம் வந்த பேராசிரியர் ஹரிபத்மன் மாணவிகளுடன் ரயில் நிலையத்தில் இறங்க வில்லை. இதைதொடர்ந்து, போலீசார் ஹரி பத்மனை செல்போனில் தொடர்பு கொண்ட போது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் தலைமறைவானது தெரியவந்தது.

உடனே பேராசிரியரை கைது செய்ய உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பேராசிரியரின் செல்போன் எண்ணை வைத்து, அவருடன் கடந்த 2 நாட்களாக தொடர்பு கொண்ட நபர்கள் யார் யார் என்று பட்டியல் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது மாதவரம் பகுதியை சேர்ந்த பெண் தோழி ஒருவரிடம் அடிக்கடி ஹரிபத்மன் பேசியது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் ஹரிபத்மன் தோழியின் விவரங்களை எடுத்து ரகசியமாக அவரது வீட்டை கண்காணித்தனர்.

அப்போது வீட்டின் முதல் தளத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் பதுங்கி இருந்தது உறுதியானது. தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை அதிரடியாக பெண் தோழியின் வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, பேராசிரியரின் பெண் தோழி போலீசாரை வழிமறித்து என்ன என்று கேட்டு திசை திருப்ப முயன்றார். ஆனால் போலீசார் வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் பதுங்கி இருந்த ஹரி பத்மனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் வைத்து பேராசிரியர் ஹரிபத்மனிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, பேராசிரியர், தான் மாணவிகளுடன் சகஜமாக பழகியதாகவும், அதை அவர்கள் தவறாக புரிந்துகொண்டு என் மீது புகார் அளித்துள்ளதாகவும் திரும்ப திரும்ப கூறியுள்ளார், அதேநேரம், அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்தனர். அதில், பிரச்னை பெரிய அளவில் வெடித்த போது, பேராசிரியர் தனது செல்போனில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள், 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அழித்து இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் புகார் அளித்த கேரளா மாணவி குறித்து கேட்ட போது, வெளிமாநிலங்களுக்கு கச்சேரிக்கு செல்லும் போது, சில தவறுகள் நடந்தது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். அதை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர்.

பிறகு போலீசார் ஹரிபத்மனை நேற்று மாலை சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவுப்படி வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். போலீசார் ஹரிபத்மனை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து பின்னர் சிறையில் அடைத்தனர். அவரது கைதுக்கு பிறகு அவரிடம் நடத்திய விசாரணயில் மாணவிகளிடம் வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது, சில நேரங்களில் சென்னையில் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, இதுபோல் அவரால் பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பதும் விசாரணை மூலம் உறுதியாகி உள்ளது.

எனவே, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஹரி பத்மனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், கலாஷேத்ரா கல்லூரியில் உதவி நடன கலைஞர்களான உள்ள சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது முன்னாள் மாணவிகள் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளதால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே அடையாறு காவல் நிலையத்தில் கேரளா மாணவி அளித்த புகாரில் தன்னுடன் 2019ம் ஆண்டு படித்த கேரளா மாணவிகள் 5 பேர் பேராசிரியர் மூலம் சீரழிக்கப்பட்டதாகவும், அவர்களில் சிலர் பாதியிலேயே கல்லூரியில் இருந்து நின்றதாகவும் கூறியிருந்தார்.

அதைதொடர்ந்து நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கேரளாவில் உள்ள 5 மாணவிகளிடம் விசாரணை நடத்த சென்றனர். கேரளா சென்ற தனிப்படையினர், புகார் அளித்த மாணவியுடன் படித்த 5 மாணவிகளிடம் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியாமல், சக மாணவிகளின் உதவியுடன் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் ரகசிய இடத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பாதிக்கப்பட்ட மாணவிகள், கலாஷேத்ரா கல்லூரி மூலம் நாடு முழுவதும் பல கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு செய்யப்பட்ட நாங்கள், பேராசிரியர் ஹரிபத்மன் தலைமையில் வெளிமாநிலங்களுக்கு நடன கச்சேரிக்கு சென்றோம்.

அப்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த நட்சத்திர ஓட்டலில் தங்குவது வழக்கம். ஹரிபத்மன் எங்களை பெரிய நடன கலைஞராக உருவாக்குவதாக கூறி ஆசைவார்த்தை கூறினார். மேலும், எங்களை தனித்தனியாக அவரது அறைக்கு அழைத்து தொடர் பாலியல் தொந்தரவு செய்தார். அதை எங்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி தொடர் பாலியல் தொந்தரவு செய்து வந்தார். அதோடு இல்லாமல், கச்சேரி முடிந்ததும், எங்களை விஐபிக்களுக்கு அறிமுகம் செய்வார். அப்போது, அவர்கள் நாங்கள் நன்றாக நடனமாடியதாகவும், நீங்கள் பெரிய நடன கலைஞராக வருவீர்கள் என்றும் கூறுவார்கள்.

அதன் பிறகு பேராசிரியர் ஓட்டலுக்கு வந்த பிறகு, நான் அறிமுகம் செய்த விஐபி சந்திக்க விரும்புவதாக கூறி கட்டாயப்படுத்துவார். நாங்கள் மறுப்பு தெரித்தால், உடனே, எங்களை நெருக்கமாக இருந்த போது, எடுத்த வீடியோவை காட்டியும், பெரிய நடன கலைஞராக வரவேண்டும் என்றால், விஐபியுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்தார். நாங்கள் மறுப்பு தெரிவித்ததும், எங்களை கல்லூரியில் ஒழுக்கம் இன்றி நடந்ததாக கூறி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்து பல வகையில் தொந்தரவு செய்தார். இதனால் நாங்கள் கல்லூரியில் இறுதி ஆண்டில் பாதியிலேயே வெளியேறினோம். அப்போதும் எங்களை விடாமல், கச்சேரிக்கு வரவேண்டும் என்று கூறி சென்னைக்கு அழைத்து பேராசிரியர் மற்றும் உதவி நடன கலைஞர்கள் தொந்தரவு செய்தனர் என கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்ததாக தனிப்படையினர் தெரிவித்தனர்.

இது பாலியல் வழக்கு என்பதால், விசாரணை நடத்திய மாணவிகள் பெயர்கள், அவர்களின் விவரங்களை வெளியே தெரிவிக்க தனிப்படையினர் மறுத்துவிட்டனர். கேரளாவில் ரகசியமாக நடத்தப்பட்ட விசாரணையில் ஹரிபத்மன் உள்பட 4 பேர் மீது வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளது. இதனால் அவர்கள் இனி தப்பிக்க முடியாது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் இ-மெயில் மூலம் வெளிநாட்டில் உள்ள சில மாணவிகள் புகார் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சிலர் தொலைபேசி எண்கள் மூலமும் புகார் அளித்து வருகின்றனர். மாணவிகளின் புகார்கள் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  • பேராசிரியர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்
    தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் தலைவர் குமாரி முன்பு கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி, துணை இயக்குனர் பத்மாவதி, கல்லூரி உள்ளீட்டு புகார் குழு (ஐசிசி கமிட்டி) உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் நேற்று ஆஜராகினர். அப்போது மாணவிகளின் குற்றச்சாட்டிற்கு வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே புகாருக்குள்ளான பேராசிரியர் உள்பட 4 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பின்னர் விசாரணைக்கு பிறகு கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி, அறக்கட்டளை நிர்வாகிகளிடம் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு அளித்து வந்த பேராசிரியர் ஹரிபத்மன், உதவி நடன கலைஞர்களான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை அதிரடியாக கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.
  • தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
    திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில், பேராசிரியர்கள் 4 பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. இதையடுத்து அங்குள்ள 4 பேராசிரியர்கள் மீது விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில் பேராசிரியர் ஹரிபத்மன் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையர் அலுவலகத்தில், ஆணையர் குமாரி முன்னிலையில் நேற்று கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராகி நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் தனிப்பட்ட முறையில் நேரிலோ அல்லது இ-மெயில் மற்றும் தொலைபேசி மூலமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாஷேத்ரா இயக்குனர், துணை இயக்குனர் ஆகியோரிடம் நடத்திய விசாரணை மற்றும் மாணவிகள் அளித்த புகார் அடிப்படையில் மாநில மகளிர் ஆணையம் சார்பில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, நேற்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளர் இறையன்புவிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையில், கலாஷேத்ராவில் சமீபகாலமாக மாணவிகளுக்கு யார் யார் பாலியல் தொல்லை கொடுத்தது, இது தொடர்பாக மாணவிகள் அளித்த புகார், தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • அழிக்கப்பட்ட வீடியோவை எடுக்க செல்போன் ஆய்வு
    தனிப்படைஹரிபத்மனை கைது செய்த போது, அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்த போது, செல்போன்களில் உள்ள தகவல்கள் அதிகளவில் அழிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் ஹரிபத்மன் பயன்படுத்திய செல்போனை, தடயவியல் துறை ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் துறை ஆய்வுக்கு பிறகு தான், ஹரிபத்மன் மூலம் எத்தனை மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்கள் என்ற முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஹரிபத்மன் கைது: சென்னையில் தோழி வீட்டில் பதுங்கியிருந்தபோது சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Haripadman ,Kalashetra ,Chennai ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...