×

தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்!: உதகை மலர் கண்காட்சியில் 2500 மலர் தொட்டிகளில் விழிப்புணர்வு வாசகம் அமைப்பு..!!

நீலகிரி: உதகையில் நடைபெறவிருந்த 124வது மலர் கண்காட்சி ரத்தான நிலையில், 2500 மலர் தொட்டிகளை கொண்டு உருவாக்கப்பட்ட, அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்ற வாசகம் அனைவரையும் கவர்ந்துள்ளது. உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் – மே மாத கோடை சீசனில் சுற்றுலாத் தளங்களை கண்டு ரசிக்க சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அப்போது மலைகளின் அரசிக்கு மலர் மகுடம் சூட்டும் விதமாக நடத்தப்படும் மலர் கண்காட்சி கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. 
இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், பூங்காவில் உள்ள 5 லட்சம் மலர் செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக மலர் கண்காட்சிக்கு தயார் செய்யப்பட்ட 25,000 மலர் தொட்டிகளில் வில்லியம், மேரிகோல்டு, பிகோனியா, சால்வியா, டெய்லியா உள்ளிட்ட 250 ரகங்களை சேர்ந்த மலர்கள் சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ஊதா என கண்கவர் வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஆனால் தற்போது  கொரோனா பாதிப்பு காரணமாக 2வது ஆண்டாக மலர் கண்காட்சி ரத்தாகி உள்ளது. 
இதனையடுத்து பொதுமக்கள் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்ற வாசகம் 2500 மலர் தொட்டிகளை கொண்டு அமைத்துள்ளனர். இதனிடையே கோடை சீசனில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக தயார் செய்யப்பட்ட மலர்களை காண யாரும் இல்லை என்பது வருத்தம் அளிப்பதாக பூங்கா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று முடிவுக்கு வந்து அடுத்த ஆண்டாவது மலர் கண்காட்சி நடைபெற வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

…

The post தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்!: உதகை மலர் கண்காட்சியில் 2500 மலர் தொட்டிகளில் விழிப்புணர்வு வாசகம் அமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Uthagai Flower Fair ,Utkai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து