×

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கக்கூடிய பணிகளில் ஒன்றிணைவோம்: தொண்டு நிறுவன பிரதிநிதிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தொண்டு நிறுவன பிரதிநிதிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 27 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இந்த கொரோனா தொற்று நோயினை தன்னார்வலர்கள் பலர் தனித்தனியாகவும், குழுவாகவும், நிறுவனமாகவும் எதிர்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மக்களின் இழந்த வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துதல், தொற்று மற்றும் பொதுமுடக்க காலங்களில் எளியோருக்கு உணவு பொருட்கள், பால், மருந்து வழங்குதல் இதுபோன்ற பல வகைகளில் துணை நிற்பது, முதியோரை பாதுகாப்பது, புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவது, மாற்று திறனாளிகளுக்கு துணை நிற்பது ஆகிய தன்னலம் கருதாது பல பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்ற உங்களை பாராட்டுகிறேன் என்று முதல்வர் பேசினார்.
உயிருடன் இருக்கும் சக மனிதர்களுக்கு பேருதவிகளை செய்துவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்து வரும் அதேவேளையில், இத்தொற்றால் இறந்து சொந்த உறவினர்களால் கைவிடப்பட்ட, தங்களது உயிரையும் பொருட்படுத்தாது கண்ணியமாக அடக்கம் செய்யும் புனித பணிகளை மேற்கொள்ளக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போற்றுதலுக்குரியது.
வீரியம் கொண்டு தாக்கும் கோவிட் 2ஆம் பேரலையை கட்டுக்குள் கொண்டுவந்து அதனை ஒழிப்பதற்கு அரசும் தன்னார்வ நிறுவனங்களும் கரம்கோர்த்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தங்கள் நிறுவனங்கள் மூலம் அதிக அளவில் தன்னார்வலர்களை அரசோடு இணைத்துக்கொள்ளுமாறு முதல்வர் கூறியுள்ளார்.
அரசுடன் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன், உயிர்காக்கும் மருந்துகள் வழங்குவது, நோயாளிகளுக்கு இலவச வாகன வசதிகளை செய்வது, நோய் குறித்தும் தடுப்பூசி முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற சேவைகளில் உங்களை இணைத்துக்கொண்டு செயல்பட்டால் இந்த நெருக்கடியான காலத்தை எளிதில் வெற்றிகொள்ளலாம். எனவே இந்த பணிகளை ஒருங்கிணைத்து தேவைப்படும் மக்களுக்கு உதவிட மாநில அளவில் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும். எங்கெங்கு உதவிகள் தேவைப்படுகிறது என்பதை அறிந்து உதவிகளை சீராக மேற்கொள்ள கட்டளை மையம் ஒன்று ஏற்படுத்தப்படும். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கக்கூடிய பணிகளில் ஒன்றிணைவோம் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்….

The post கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கக்கூடிய பணிகளில் ஒன்றிணைவோம்: தொண்டு நிறுவன பிரதிநிதிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : coronavirus pandemic ,CM ,Stalin ,Chennai ,Chief Minister of the ,Chief Minister of ,Secretariat ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED வாசியுங்கள்..நேசியுங்கள்..! உலக புத்தக...