×

திருச்சியில் இன்று அதிகாலை ஒரு கிலோ தங்கத்துடன் வியாபாரி காரில் கடத்தல்

திருச்சி: திருச்சி பன்னாட்டு நிலையத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் பயணிகள் விமானங்கள் வந்து செல்கிறது. இதில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருகிறார்களா என்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது தங்கம், ெவளிநாட்டு கரன்சிகள் கடத்தி வந்தால் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் தங்கம், கரன்சிகளை கடத்தி வந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த கடத்தல் தங்கம், கரன்சிகளை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு சில வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி தென்னூரை சேர்ந்த சாதிக் பாட்ஷா(27) என்பவர் தனது நண்பருடன் விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு காரில் சென்றார். அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஒரு நபரிடமிருந்து ஒரு கிலோ தங்கம் மற்றும் ரூ.3.லட்சம் வெளிநாட்டு கரன்சியை பெற்று கொண்டு தென்னூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்த காரை மற்றொரு கார், ஒரு டூவீலரில் 7 பேர் கும்பல் பின் தொடர்ந்து சென்றது.

இந்நிலையில் சாதிக் பாட்ஷா தென்னூரில் உள்ள தனது வீட்டுக்கு அருகே அதிகாலை காரை நிறுத்தி விட்டு தங்கத்துடன் நடந்து சென்றார். அப்போது பின்தொடர்ந்து வந்து கும்பல் திடீரென கத்தி மற்றும் ஆயுதங்களுடன் இறங்கி சாதிக் பாட்ஷாவை தாக்கியது. இதையடுத்து அவர் வைத்திருந்த ஒரு கிலோ தங்கம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை பறித்து கொண்டு அவர்கள் வந்த காரில் சாதிக் பாட்ஷாவை மர்மகும்பல் கடத்தி சென்றது.

வீடு அருகே இந்த சம்பவம் நடந்ததால் சாதிக் பாட்ஷாவின் உறவினர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இதனால் அருகே இருந்த பொதுமக்கள் திரண்டனர். அப்போது காரில் தப்ப முயன்றபோது மர்மகும்பலை சேர்ந்த ஒருவன் தடுமாறி கீழே விழுந்தான். இருப்பினும் அந்த நபரை அங்கேயே விட்டு விட்டு கார், டூவீலரில் மர்ம கும்பல் தப்பி சென்றது. இதையடுத்து அந்த நபரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

இந்த தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா மற்றும் தெற்கு காவல் துணை கமிஷனர் தேவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த கதிரேசன் என்பது தெரியவந்தது. மேலும் சத்திய பிரியா உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

இன்று காலை சமயபுரம் பகுதியில் காரிலிருந்து சாதிக் பாட்ஷாவை இறக்கி விட்டு விட்டு மர்ம கும்பல் தப்பியது. இதுகுறித்து தகவல் அளித்த சாதிக் பாட்ஷாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கதிரேசன் அளித்த தகவலின்பேரில் மர்ம கும்பலை சேர்ந்தவர்களின் செல்போன் எண்களை கண்காணித்து வருகிறோம். அவர்கள் எந்த வழியாக செல்கின்றனர் என்று செல்போன் எண்ணை வைத்து ஆராய்ந்து வருகிறோம். மேலும் பெரம்பலூர் அருகே உள்ள தொழுதூர் சுங்கச்சாவடி மற்றும் உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். குற்றவாளிகள் மிக விரைவில் சிக்குவர் என்றனர்.

கடத்தல் தங்க வியாபாரிகள்: சாதிக் பாட்ஷா மற்றும் பிடிபட்ட கதிரேசன் ஆகியோர் கடத்தல் தங்கம், வெளிநாட்டு கரன்சிகளை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. நேற்றிரவு கதிரேசனுக்கு தெரியாமல் கடத்தல் தங்கத்தை குறிப்பிட்ட நபரிடமிருந்து பெற்று கொண்டு தென்னூருக்கு சாதிக் பாட்ஷா வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கதிரேசன் தனது நண்பர்களுடன் சாதிக் பாட்ஷாவை பின்தொடர்ந்து தாக்கி தங்கத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

The post திருச்சியில் இன்று அதிகாலை ஒரு கிலோ தங்கத்துடன் வியாபாரி காரில் கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Singapore ,Malaysia ,Dubai ,Trichy International Airport ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...