தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி?

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறை குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கின்றது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை 76 மையங்களில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனி தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு கூண்டு அமைக்கப்பட்டு 14 மேஜைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு மேஜையிலும் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒரு அலுவலர் இருப்பார். ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் 14 முகவர்களும், ஒரு முதன்மை முகவரும் அனுமதிக்கப்படுவார்கள். 

மேஜையில் குறிப்பிட்ட சட்டப்பேரவை தொகுதிக்கான இயந்திரம் மட்டுமே வைக்கப்படும். பதிவான மொத்த வாக்குகள் மற்றும் பிற விவரங்கள் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவாகி இருக்கும். அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் முகவர்களுக்கு காண்பிப்பார். ஒவ்வொரு இயந்திரத்தின் பட்டனை அழுத்தியதும் வாக்குச்சாவடி விவரம், வேட்பாளர் விவரம், பதிவான மொத்த வாக்குகள், வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் திரையில் தெரியும். வாக்குப்பதிவு நாளன்று முகவர்களுக்கு கொடுக்கப்பட்ட விவரங்கள், வாக்கு எண்ணிக்கை நாளன்று ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். பதிவான மொத்த வாக்கு எண்ணிக்கையில் வித்யாசம் இருந்தால் முகவர்கள் கேள்வி எழுப்புவார்கள். 

வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நோட்டாவில் பதிவான வாக்குகள் அறிவிக்கப்படும். இதையடுத்து இயந்திரம் பாதுகாப்பாக மூடி வைக்கப்படும். இந்த நடைமுறை 14 மேஜைகளிலும் முடிந்த பிறகு ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததாக கணக்கிடப்படும்.. இதையடுத்து 14 மேஜைகளிலும் அடுத்த சுற்றுக்கான கட்டுப்பாட்டு இயந்திரம் வைக்கப்படும். வாக்கு சாவடி எண்ணிக்கையை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை 15 முதல் 30 வரை செல்ல வாய்ப்புகள் உண்டு. வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம், காலை 9 மணி முதல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ் வழங்குவார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைமுறை முடிவுக்கு வரும். 

Related Stories:

>