அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஜப்பான் உட்பட வெளிநாடுகளில் இருந்து குவியும் அவசர மருத்துவ உதவிகள்: டெல்லி சர்வதேச விமான நிலையம் ‘பிஸி’

புதுடெல்லி: அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஜப்பான் உட்பட வெளிநாடுகளில் இருந்து கொரோனா மருந்து பொருட்கள் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் குவிந்து வருவதால் விமானம் நிலையம் ‘பிஸி’ ஆக உள்ளது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்துவதற்கு 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த வரிசையில் ரஷியாவில் இருந்து நேற்று 2 விமானங்களில் 20 டன் மருத்துவ பொருட்கள் டெல்லி வந்து சேர்ந்தன. மேலும், இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அமெரிக்காவும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

ஆக்சிஜன் செறிவூட்டிகள்,  ரெம்டெசிவிர் மருந்துகள், முகக் கவசங்கள் என பல்வேறு மருந்து பொருட்கள் மற்றும் தளவாடங்கள் அங்கிருந்து இந்தியா வந்து சேர்ந்து இருக்கின்றன. தொடர்ந்து வருகிற நாட்களில் 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.740 கோடி)  மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்கா நேற்று  தெரிவித்து உள்ளது. இதைத்தவிர 2 கோடி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி  டோஸ்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும், இன்னும் ஏராளமான ஆக்சிஜன் டேங்குகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் வெள்ளை  மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

அத்துடன் இந்தியாவில் உள்ளூர் ஆஸ்பத்திரிகளில் நிறுவுவதற்கான ஆக்சிஜன் அலகுகளை  அனுப்ப இருப்பதாகவும், இவற்றை இயக்குவதற்கு உயர்மட்ட மருத்துவக்குழு  ஒன்றும் இந்திய மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து செயல்படுவார்கள் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில், இன்று அயர்லாந்தில் இருந்து 700 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், 365 வென்டிலேட்டர்களும் இன்று காலை டெல்லி வந்தடைந்தன. மேலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், பிபிஇ, விரைவான சோதனைக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களின் முதல் சரக்கு அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்தடைந்துள்ளது. மூன்றாவது முறையாக இன்று காலை இங்கிலாந்திலிருந்து 280 ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லி வந்தது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி கூறுகையில், ‘இங்கிலாந்து அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சடோஷி சுசுகி இன்று வெளியிட்ட டுவிட்டில், ‘இந்தியாவுடன் ஜப்பான் என்றும் துணை நிற்கும். ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு 300 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் மற்றும் 300 வென்டிலேட்டர்களை வழங்க முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: