×

நாளை மே தினம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தொழிலாளர்கள் தினமான மே தினம் (நாளை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழக மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:  
எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்): உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் உன்னத தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் நன்னாளாகவும் மே தினம் கொண்டாடப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும்.

துணை முதல்வர் ஓபிஎஸ்: உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாளில், தொழிலாளர் அனைவருக்கும் உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறன். தங்களது தளர்வறியா உழைப்பின் மூலம் தமிழகத்தை உயர்த்தி வரும் தொழிலாளர்களுக்கு `மே தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): கொரோனா தொற்றினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி குறைந்து, வேலை வாய்ப்பு  இழந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவருக்கும்  மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிற வகையில் நிவாரண தொகை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்); உழைப்பாளர்கள் ஒன்றுபட்டு நின்றால்தான், உரிமைகளை வென்றெடுக்க முடியும். திராவிட இயக்கத்தின் வெற்றிக்காகவும், உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடுகின்ற சக்திகளை ஒன்று திரட்டி, மேலும் மேலும் வெற்றிகள் குவிக்க உழைப்போம் எனச் சூளுரைத்து, மே நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): ஒருபுறம் உயிரைப் பறிக்கும் கொரோனா, மறுபுறம் வாழ்வாதார இழப்பால் ஏற்பட்ட வறுமை என தொழிலாளர்களின் துயரம் பெருகிக் கொண்டே செல்கிறது. இருளுக்குப் பிறகு ஒளி என்பது இயற்கை. பாட்டாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.

அன்புமணி (பாமக இளைஞரணி தலைவர்): தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைக்கும் வர்க்கத்திற்கு உயர்வு கிடைக்க வேண்டும்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): உழைப்பாளர்களாலும், அவர்களின் உழைப்பால் மட்டுமே இந்த உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை மே தினம் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. உழைப்பவரே உயர்ந்தவர் என்பதை உரக்கச் சொல்லும் பொன்னாளாகவும் இந்த நன்னாள் திகழ்கிறது.

ஏ.சி. சண்முகம் (புதிய நீதிக்கட்சியின் தலைவர்): சுய நலமில்லாது, பொதுநலம் கருதி, இரவு, பகல் என்று பாராமல், மழை, வெயில் என்று நினைக்காமல், ஓய்வெண்பதே அறியாமல் உழைப்பு, உழைப்பு என்னும் ஒற்றை வார்த்தையையே தாரக மந்திரமாக உச்சரித்தும், பாடுபடும் தொழிலாளர்களை நன்றியுடன் போற்றுவோம்.

வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்): கொரோனா காலத்தில் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தோர் உட்பட காணத் தகுந்தது வறுமையே, அவர்கள் பூணத் தெரிந்தது பொறுமையே’ என்று வறுமையாலும், தொற்று நோய் அச்சத்தினாலும் அலைக்கழிக்கப்படும் அவதியில் அல்லல்பட்டு ஆற்றாது அழுகின்ற கண்ணீர் விடும் நிலை மாறவேண்டும்.

சரத்குமார் (சமக தலைவர்):லாபத்திற்காக மட்டும் உழைப்பு என்றில்லாமல் கொரோனா 2 - வது அலையை தைரியத்துடன் எதிர்கொண்டு நேர, கால வரையறையின்றி ஓய்வறியாமல் மக்கள் உயிர்காக்க போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், பத்திரிகை / ஊடகவியலாளர்கள், காவல்துறையினரின் உன்னத உழைப்பை இந்நேரத்தில் பாராட்டி பெருமைப்படுத்துவோம்.

எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம் தலைவர்):இந்த உலகத்தின் முதுகெலும்பே உழைப்பாளர்கள். இந்த உலகம் இன்று இருக்கும் இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணம் உழைப்பு. ஒரு காலத்தில் கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்கள் தங்களை தாங்களே விடுவித்துக்கொண்டு சுதந்திர காற்றை சுவாசித்த நாளே நாம் மே தினமாக கொண்டாடுகிறோம்.

என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்):நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடும் தொழிலாளர்கள், எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

சேம.நாராயணன் (மக்கள் தேசிய கட்சி தலைவர்):இந்த ஆண்டு என்ன நடக்கப் போகிறதோ என்று மனித உயிர் பறிப்பை கண்டு ரத்த கண்ணீர் வடித்துக் கொண்டுயிருக்கிறோம். இதை நம்மை நாமே பாதுகாப்பதின் மூலமே தடுக்க முடியும். தொழிலாளர்களின் துயர் துடைத்து தமிழகத்திற்கு விடியல் தரும் ஆண்டாக மே தினம் மலரட்டும்.

ஹென்றி (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்): கொடிய கொரோனா பேரிடர் நோயிலிருந்து மக்களை காக்கும் மகத்தான பணியில் முன் வரிசையில் நின்று, தங்கள் உயிரை துச்சமென மதித்து களமாடும் அத்துணை உழைப்பாளிகளுக்கும் மே தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இதேபோல் டாக்டர் வி.ஜி. சந்தோ சம், தமிழ் மாநில தேசிய லீக் மனிதநேய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் மே தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : Tomorrow is May Day: Congratulations to the leaders
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...