மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்ய மறுப்பு: தனியார் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: மாதவரம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்திற்கு வரும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்ய மறுப்பதுடன், தனியார் பரிசோதனை மையத்துக்கு செல்லும்படி அறிவுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், 31வது வார்டு கண்ணபிரான் கோயில் தெருவில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. இங்கு, பொது மருத்துவம், மகப்பேறு, காசநோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குழந்தைகள் நலம் போன்ற சிகிச்சையளிக்கப்படுகிறது. சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான கர்ப்பிணிகள் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக தினசரி இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சமீப காலமாக இங்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனை செய்ய மறுக்கும் டாக்டர்கள், மூலக்கடையில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு செல்லும்படி கர்ப்பிணிகளை அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேற்கண்ட தனியார் பரிசோதனை மையத்தில் ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதால் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கர்ப்பிணிகள் கூறுகையில், ‘இந்த ஆரம்ப சுகாதார மையத்தில் ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனை இலவசமாக செய்யப்படும் என்று போர்டு வைத்துள்ளனர். ஆனால், அவ்வாறு செய்வது இல்லை. அதற்கு பதிலாக இங்குள்ள மருத்துவர்கள், தனியார் பரிசோதனை மையத்திற்கு பரிந்துரை செய்து எழுதி கொடுக்கின்றனர். அந்த தனியார் பரிசோதனை மையத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதால், அவதிக்குள்ளாகிறோம். மேற்கண்ட தனியார் பரிசோதனை மையத்தில் இருந்து இங்குள்ள டாக்டர்களுக்கு மாதம்தோறும் கமிஷன் வழங்குவதால், இவ்வாறு கர்ப்பிணிகளை அலைக்கழிக்கின்றனர். எனவே ஏழை மக்கள் சிரமத்தை போக்கும் வகையில் இந்த ஆரம்ப சுகாதார மையத்தில் ஸ்கேன், ரத்த பரிசோதனை செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories:

>