புதுடெல்லி: ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். நடப்பு சீசனில் இது டெல்லியில் நடைபெறும் முதல் போட்டி என்பதுடன், ஐதராபாத் அணி முதலில் பேட் செய்யும் போட்டியும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் விராத் சிங், அபிஷேக் ஷர்மாவுக்கு பதிலாக மணிஷ் பாண்டே, சந்தீப் ஷர்மா இடம் பெற்றனர். சென்னை அணியில் டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிருக்கு பதிலாக மொயீன் அலி, லுங்கி என்ஜிடி சேர்க்கப்பட்டனர். வார்னர், பேர்ஸ்டோ இருவரும் ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். பேர்ஸ்டோ 7 ரன் மட்டுமே எடுத்து சாம் கரன் வேகத்தில் தீபக் சாஹர் வசம் பிடிபட்டார். அடுத்து வார்னருடன் மணிஷ் பாண்டே இணைந்தார்.
வார்னர் 57 ரன் (55 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), மணிஷ் 61 ரன் (46 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி, என்ஜிடி வீசிய 18வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தனர். தாகூர் வீசிய 19வது ஓவரில் கேன் வில்லியம்சன் 3 பவுண்டரி, 1 சிக்சர் விளாச ஐதராபாத் ஸ்கோர் எகிறியது. சாம் கரன் வீசிய கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளையும் கேதார் ஜாதவ் 4, 6 என விரட்டி அசத்த, சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. வில்லியம்சன் 26 ரன் (10 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கேதார் 12 ரன்னுடன் (4 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் என்ஜிடி 2, சாம் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. ருதுராஜ் கெயிக்வாட், டு பிளெஸ்ஸி இருவரும் துரத்தலை தொடங்கினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து வென்றது. ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 75 ரன் (44 பந்து, 12 பவுண்டரி) விளாசினார். டு பிளெஸ்ஸி 56 ரன், சுரேஷ் ரெய்னா 17 ரன் (அவுட்இல்லை) எடுத்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் ரஷித்கான் 3 விக்கெட் வீழ்த்தினர். சென்னை அணி 6 போட்டியில் 5வது வெற்றியை பதிவு செய்து 10 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் தலா 10 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் சென்னை முன்னிலை வகிக்கிறது.