நாடு முழுவதும் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு திருச்சி பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படுமா? மத்திய அரசு அனுமதி வழங்கிட தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல்

திருவெறும்பூர்: ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவசர தேவைக்காக திருச்சி பெல் நிறுவனத்தில் புதிய பிளாண்ட் தொடங்கி ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்று திருச்சி பெல் தொழிற்சங்க பிரதி

நிதிகள் தெரிவித்தனர். நாடுமுழுவதும் இரண்டாவது கொரோனா அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்படும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. தற்போது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் உள்ள மருத்துவமனையிலும் தொடர் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதேபோல், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல்நிறுவனம் கடந்த 1980ம் ஆண்டு பெல் நிறுவனத்தின் தேவைக்காகவும், மருத்துவமனை தேவைக்காகவும் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக பிளான்ட் நிறுவியது.

1999 வரை ஆக்சிஜன் தயாரித்து வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த பிளான்ட் தொடர்ந்து செயல்படுவதற்கு இயந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் கிடைக்காததால் நிறுத்தப்பட்டது. ஆக்சிஜன் பிளான்டில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு ஆகும் செலவை விட வெளியில் வாங்குவது குறைவாக இருப்பதால் அந்த பிளான்ட் மூடப்பட்டது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் பிளான்டை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பெல் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இந்தியாவில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு உத்தரவிட்டால் பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் பிளான்ட் புதிதாக தொடங்கப்பட்டு அரசுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கு மத்திய அரசுதான் உத்தரவிட வேண்டும்.

இந்நிறுவனம் தன்னிச்சையாகவோ அல்லது தொழிற்சங்கங்களோ முடிவு செய்ய முடியாது. மத்திய அரசு உத்தரவிட்டால் குறைந்தது 20 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் புதிய ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கப்பட்டு உற்பத்தி தொடங்க முடியும். பெல் மருத்துவமனைக்கு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆக்சிஜன் தற்போது தனியாரிடம் இருந்து பெற்று வருகின்றனர். அதனால் மீண்டும் பெல் நிறுவனத்தில் புதிய ஆக்சிஜன் பிளான்ட் தொடங்க பெல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும்’’ என்றனர். தற்போது, நாடே ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறி வருவதால், பெல் நிறுவனத்தில் மத்திய அரசு புதிய பிளான்ட் தொடங்கி 20 முதல் 30 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்துவிட முடியும் என பெல் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மக்களின் விலை மதிப்பு இல்லா உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>