×

கொரோனா பரவலால் சித்திரை திருவிழா ரத்து: கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் கும்மி அடித்து திருநங்கைகள் வேண்டுதல்

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வந்து கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொண்டு விடிய, விடிய கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். அடுத்த நாள் நடைபெறும் சித்திரை தேரோட்டத்தை தொடர்ந்து அரவான் களப்பலி நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு திருநங்கைகள் வெள்ளை புடவை உடுத்தி சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா நடைபெறும் என ஆர்வமுடன் திருநங்கைகள் இருந்த நிலையில்  கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இந்த ஆண்டும் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்து அடுத்த ஆண்டாவது திருவிழா நடைபெற  வேண்டும் என வேண்டிக் கொண்டனர். பின்னர் கோயிலின் முன்பகுதியில் கற்பூரத்தை கொட்டி கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

Tags : Siddhian festival ,Kouwakam Cattanadavar Temple , Chithirai festival canceled due to corona spread
× RELATED மதுரை சித்திரை திருவிழாவில்...