×

எவர்கிரீன் நிர்வாகம் - சூயஸ் கால்வாய் ஆணையம் மோதல் கப்பலில் தவிக்கும் 26 இந்தியர்கள்: ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் அவலம்

கெய்ரோ: ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் ‘எவர்கிரீன்’. இது, கடந்த மாதம் 23ம் தேதி எகிப்தில் உள்ள உலகின் மிக முக்கியமன நீர்வழிப் பாதையான சூயஸ் கால்வாய் வழியாக சென்றது. அப்போது வீசிய சூறாவளி காற்றால், கட்டுப்பாட்டை இழந்து கால்வாயின் குறுக்கே தரைதட்டியது. இதனால், அந்த வழியாக பல்வேறு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல முடியாமல் ஒரு வாரத்துக்கும் மேலாக காத்திருந்தன. ஒரு வாரத்துக்கு மேல் நடந்த மீட்பு பணிக்குப் பிறகு, ‘எவர் கிரீன்’ கப்பல் மீட்கப்பட்டது.

இந்த கால்வாயை, ‘சூயஸ் கால்வாய் ஆணையம்’ நிர்வகித்து வருகிறது. அதற்கு, இந்த பாதையை உலக நாடுகளின் கப்பல்கள் பயன்படுத்துவதில் தினமும் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில், கப்பல் தரைதட்டியதால் அதை மீட்பதற்காக ஏற்பட்ட செலவு, கால்வாயில் ஏற்பட்ட சேதத்துக்கு நஷ்டஈடு, நீர்வழிப் போக்குவரத்து தடைபட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு ரூ.7,500 கோடி நஷ்டஈடு வழங்கும்படி சூயஸ் நிர்வாகம் கேட்டது. இதை கேட்டு, எவர்கிரீன் கப்பல் உரிமையாளரான ஷோய் கிசென் கைஷா நிறுவனம் அதிர்ந்தது. அவ்வளவு பெரிய தொகை வழங்க முடியாது என தெரிவித்தது.

இதையடுத்து, அதன் மீது எகிப்து நீதிமன்றத்தில் சூயஸ் கால்வாய் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது, சூயஸ் கால்வாயின் அருகில் உள்ள செயற்கை ஏரி ஒன்றில் எவர்கிரீன் கப்பலை சூயஸ் கால்வாய் நிர்வாகம் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், இந்த கப்பலை இயக்கிய மாலுமிகள், ஊழியர்கள் என மொத்தம் 26 பேர் கப்பலில் சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவருமே இந்தியர்கள். எவர்கிரீன் கப்பல் உரிமையாளர்- சூயஸ் கால்வாய் ஆணையம் இடையிலான சட்ட மோதலால், ஒரு மாதத்துக்கும் மேலாக இவர்கள் கப்பலிலேயே முடங்கி கிடக்கின்றனர். இவர்கள் கப்பலை விட்டு வெளியே வருவதற்கு சூயஸ் கால்வாய் ஆணையம் அனுமதிக்கவில்லை.

இது தொடர்பாக இந்திய கடல் தொழில் சங்கத்தின் தலைவர் அப்துல்கானி செராங் கூறுகையில், ‘‘கப்பலில் இருப்பவர்கள் அனைவரும் தொழில்நுட்ப வல்லுநர்கள். அவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை விடுவிக்க வேண்டும். நஷ்டஈடு பிரச்னை முடியும் வரையில் அவர்களை கப்பலில் வைத்திருப்பது இயலாத காரியம்,” என்றார். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

உலகளவில் இது புதிதல்ல 5,700 ஊழியர்கள் தவிப்பு
* விபத்து உள்ளிட்ட சர்ச்சைகளால் கப்பல் ஊழியர்களை பிணைக் கைதிகளாக பிடிப்பது புதிதல்ல. இதற்கும் முன்பும் பல சம்பவங்கள் உலகளவில் நடந்துள்ளன.
* சர்வதேச கடல்சார் அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, 2020ம் ஆண்டு ஜனவரியில் இருந்து கடந்த ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இதுபோன்ற 31 சம்பவங்களில் 470 ஊழியர்கள் சிக்கி உள்ளனர்.
* கடந்த 2004ம் ஆண்டு முதல் இதுபோன்ற 438 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. இதில், 5,700க்கும் மேற்பட்ட கப்பல் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Suez Canal Authority ,Indians , Evergreen management - Suez Canal Authority 26 Indians stranded on ship: Tragedy lasting more than a month
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...