×

மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: ‘தேர்தல் ஆணையத்தால்தான் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது,’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்த நிலையில், தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்கும்போது வெற்றி கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் இருந்து கொரோனா 2வது அலையின் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. கடந்தாண்டை விட தினசரி பாதிப்பும், பலியும் கணிசமாக அதிகரித்து கொண்டிருந்த நிலையில், தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி வெளியிட்டது.

மேலும், ‘கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும்’ என்றும் உறுதி அளித்தது. மேற்கு வங்கத்துக்கு மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் கடந்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அசாமில் 3 கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் மட்டும் நாளை இறுதிக்கட்ட தேர்தல் முடிகிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரங்கள் நடந்து கொண்டிருந்தபோதே, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது. ஆனால், அனைத்து மாநிலங்களிலும் எந்த அரசியல் கட்சியும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை.

பிரமாண்ட பொதுக்கூட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டன. இவற்றில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஐந்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த பிரசார கூட்டங்களில் பேசினர். ஆனால், கொரோனா வழிகாட்டு பாதுகாப்பு நெறிமுறைகளை பற்றி அப்போது அவர்கள் கவலைப்படவில்லை. தேர்தல் ஆணையமும் இதை கண்டு, பாராமுகமாகவே இருந்து விட்டது. மேற்கு வங்கத்தில் இதுவரையில் 3 வேட்பாளர்கள் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். தமிழகத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் இறந்தார் ஆனால், இவர் தேர்தல் முடிந்த பிறகே இறந்தார்.

மற்ற 4 மாநிலங்களில் தேர்தல் முடிந்த பிறகுதான், தேர்தல் ஆணையம் சுதாரித்தது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் 6ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. இரவு 7 மணியுடன் பிரசாரத்தை முடிக்கவும், தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பாக பிரசாரத்தை நிறுத்தவும் உத்தரவிட்டது. இதனால், பிரதமர் மோடி, அமித்ஷா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் தங்களின் தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்தனர். தற்போது, காணொலி மூலமாக பிரசாரம் நடத்தப்படுகிறது. மேலும், மேற்கு வங்கத்தில் கடைசியாக எஞ்சியிருந்த 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்தி முடிக்கும்படி கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மேற்கு வங்கத்தில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் முடிந்ததும், அன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்பின், 5 மாநிலங்களிலும் பாதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வரும் நிலையில், ‘நாட்டில் கொரோனா பரவல் அதிகமாகி பாதிப்பும், பலியும் கட்டுங்கடங்காமல் போனதற்கு தேர்தல் ஆணையம்தான் காரணம்,’ என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டித்தது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடக்குஅம் 5 மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையம் நேற்று புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், குறிப்பாக, வாக்கு எண்ணிக்கையின் போதும், அதன் பிறகும் அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ வெற்றி கொண்டாட்டங்கள், பேரணிகளை நடத்த அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் பட்டாசு வெடிக்கவோ, ஊர்வலங்கள் செல்லவோ, கூட்டமாக கூடவோ கூடாது. இதனை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது. இந்த உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்தும்படி, மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags : Election Commission , Ban on May 2 victory celebrations: Election Commission orders
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...