திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். குறிப்பாக, தீபத்திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டுள்ளது. 14 மாதங்களாக பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாமல் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. கிரிவலம் செல்ல பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டார்.
சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த ேநரம் ேநற்று பகல் 12.16 மணியளவில் தொடங்கியது. இன்று காலை 9.59 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க, கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்களையும் அந்த வழியாக அனுமதிக்கவில்லை. கிரிவலப்பாதை வழியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் கிரிவலப்பாதை, நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், அண்ணாமலையார் கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள், கோயில் ராஜகோபுரம் எதிரே தேரடி வீதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
