×

அறந்தாங்கி அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமைகள்: பொதுமக்கள் அச்சம், பீதி

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே ஊருக்குள் வந்த 2 காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் மற்றும் பீதி அடைந்தனர். அறந்தாங்கி அருகே ஊருக்குள் வந்த 2 காட்டெருமைகளை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் வாழும் மிருகங்களுள் காட்டெருமைகளும் ஒன்று. இந்த காட்டெருமைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலேயே கூட்டமாக வாழும் இயல்பு கொண்டது. அறந்தாங்கியை அடுத்த எட்டியத்தளியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் நேற்று அதிகாலை 2 காட்டெருமைகள் நின்றுள்ளன. அவற்றை பார்த்த சிலர் சாதாரண எருமைகள் நிற்பதாக நினைத்து சென்றுள்ளனர். சிலர் தோப்பில் நிற்பது சாதாரண எருமை மாடு இல்லை எனக்கூறி, அதன் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் அங்கு நிற்பது காட்டெருமைகள் எனத் தெரியவந்தது.

உடனே அவர்கள் காட்டெருமைகள் நிற்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே காட்டெருமைகள் ஊருக்குள் நிற்கும் தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால், மிரண்ட காட்டெருமைகள் அங்கிருந்து மாங்குடி, பூவற்றக்குடி ஆகிய பகுதிகளுக்கு சென்று பின்னர் அப்பகுதியில் உள்ள மரம் செடிகளுக்குள் மறைந்தன. வனத்துறையினர் தீவிரமாக தேடியும் காட்டெருமைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அறந்தாங்கி அருகே ஊருக்குள் காட்டெருமைகள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அறந்தாங்கி பகுதியில் அடர்ந்த காடுகள் இல்லாத நிலையில், வேதாரண்யம் பகுதியில் இருந்து இந்த காட்டெருமைகள் எட்டியத்தளி பகுதிக்கு வந்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Rutthangi , Barbarism in the city near Aranthangi: Public fear, panic
× RELATED அறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன்...