×

திருவாரூரில் பழைய மருத்துவமனை கட்டிடத்தை தாலுகா மருத்துவமனையாக புதுப்பித்து செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

*அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் 5 கி.மீ தூரம் செல்லும் அவலம்

*மக்களின் குரல்

திருவாரூர் : திருவாரூரில் பழைய மருத்துவமனை கட்டிடத்தை சீரமைத்து தாலுகா மருத்துவமனை ஏற்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூரில் தாலுகா மருத்துவமனை என்பது தீயணைப்பு நிலையம் அருகில் இயங்கி வந்த நிலையில் பின்னர் 1997ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

அதன் பின்னர் 2006 முதல் 11 வரையிலான திமுக ஆட்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை திருவாரூரில் துவங்கப்பட்டு இதற்கென கலெக்டர் அலுவலகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு 2010ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட மருத்துவமனையானது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே மாவட்ட மருத்துவமனை இயங்கி வந்த கட்டிடமானது தற்போது உரிய பராமரிப்பின்றி இருந்து வருகிறது. நகரில் மக்களுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் சிறு, சிறு பிரச்னைகளுக்காக கூட 5 கி.மீ தொலைவில் இருந்து வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆகவே நகரில் இருக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பழைய மருத்துவமனை கட்டிடத்தில் தாலுகா மருத்துவமனை இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் நகரில் ஏற்படும் விபத்துக்களின்போது அவசர சிகிச்சைக்கு கூட 5 கி.மீ தூரம் செல்ல வேண்டி இருப்பதால் அவ்வாறு செல்வதற்கு நகரில் இருந்து மருத்துவமனைக்கு அடிக்கடி நகர பேருந்துகள் கிடைப்பதில்லை. மேலும் ஷேர் ஆட்டோக்களும் இயங்குவதில்லை. இதன் காரணமாக தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் ஆட்டோவிற்கு ரூ.300 வரையில் கட்டணம் செலுத்த செல்ல வேண்டிய நிலை இருந்து வருவதாலும், நகரில் மருத்துவமனை ஒன்றின் அவசியம் கருதி பழைய மருத்துவமனை கட்டிடத்தை சீரமைத்து தாலுகா மருத்துவமனையாக இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruwarur , Thiruvarur: The public demand to renovate the old hospital building in Thiruvarur and establish a taluka hospital
× RELATED திருவாரூர் அருகே சிறுமிகளிடம்...