கொரோனா 2.0 பாதுகாப்பாக இருப்போம், பக்கபலமாக நிற்போம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொரோனா 2.0 வேகமாக பரவி வரும் நிலையில் பாதுகாப்பாக இருப்போம், பக்க பலமாக நிற்போம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்கான தடுப்பூசிகள் மே 1ம் தேதி முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தடுப்பூசி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை முதல் தவணை ஊசி போட சென்றவர்களும், 2வது தவணை ஊசிக்கான காலக்கெடு நெருங்கியவர்களும் வேதனையோடு குறிப்பிடுவதை ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் காண முடிகிறது.

எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆட்சிக்கு வரும் காலம் கனிந்திருக்கின்ற போதும், மக்கள் நலனே முதன்மையானது என செயல்படும் திமுக இந்த பேரிடர் காலத்திலும் களமிறங்கி பணியாற்றி வருகிறது. கொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம் மற்றும் திரு.வி.க.நகர் தொகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியும், முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கியும் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டேன். நான் கேட்டு கொண்டதற்கிணங்க, திமுக நிர்வாகிகளும், வேட்பாளர்களும், செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் மக்களுக்கு உதவிடும் பணியில் களமிறங்கி செயலாற்றி வருவதை கவனித்து வருகிறேன்.

மக்களுக்கு தொண்டாற்றிடும் திமுகவினர், தங்கள் நலனிலும் அக்கறையுடன் இருந்து, பாதுகாத்து கொள்வது முதன்மையான கடமையாகும். கொரோனா 2.0 எனப்படும் இந்த 2வது அலையின் உயிர்ப்பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் திமுகவை சேர்ந்தவர்களும் மரணமடைகிற வேதனை செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கவனத்துடன் கடமையாற்ற வேண்டும். முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை. தொழில் வாய்ப்புகளை இழந்தோர், வேலையினை பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். அதனால், இந்த 2வது அலை தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களும் திமுகவினரும் அவற்றுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். மே 2க்கு பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளை கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மை போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்.

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அச்சம் தவிர்ப்போம் அறிவியலால் வெல்வோம்’ எனும் முன்னெடுப்பின் கீழ் சென்னை எழும்பூர், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூளை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி, ஜி.கே.எம் காலனி 34வது தெரு, கே.சி.கார்டன், திரு.வி.க. நகர் மற்றும் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கிருமி நாசினி, முகக் கவசம், சோப்பு உள்ளிட்டவற்றோடு கபசுரக் குடிநீர், தலா ஒருவருக்கு 30 முட்டைகள் வீதம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை கிழக்கு மாவட்டக் செயலாளர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், வேட்பாளர் பரந்தாமன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன், கொளத்தூர் பகுதிச் செயலாளர்கள் ஐ.சி.எஃப். முரளி, நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>