கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய வகை புழு தாக்குதலால் மா விவசாயிகள் அதிர்ச்சி-தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காயில் புதிய வகை புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மா உற்பத்தியில் தமிழகத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள தட்டக்கல், ஜெகதேவி, ஆனந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த புதிய வகை புழுக்கள் தோன்றியுள்ளது. தமிழ்நாட்டிலேயே இந்த புதிய வகை புழுக்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் உருவாகியுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தோட்டக்கலை துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், பெங்களூரு தேசிய வேளாண் பூச்சியியல் மூலாதார ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானி மோகன், கிருஷ்ணகிரி எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய தலைவர் சுந்தர்ராஜ், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் கோவிந்தன், கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குனர் உமாராணி, துணை இயக்குனர் ராம்பிரசாத் ஆகியோர் என்.தட்டக்கல் கிராமத்தில், புழு பாதித்த மாங்காய்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குனர் உமாராணி, நிருபர்களிடம் கூறுகையில், ‘காவேரிப்பட்டணம் பகுதியில் 428 ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. என்.தட்டக்கல் கிராமத்தில் உள்ள மாந்தோப்புகளில், புதிய வகை புழுக்கள் உருவாகி உள்ளது. தொடர்ந்து விவசாயிகள் மருந்து தெளித்து வருவதால், இவை உருவாகி இருக்கலாம். இதற்கு முதலுதவியாக இரண்டு மருந்துகளை வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

அதில், புளுபெண்டமைடு ஒரு லிட்டருக்கு 5 மி.லி., வீதம் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம், இரண்டு முறை தெளிக்க வேண்டும். அல்லது டெல்டாமெத்ரின் ஒரு லிட்டருக்கு 1 மி.லி., கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இவற்றை தெளிப்பதன் மூலம் இந்த புழுக்கள் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளது,’ என்றார்.பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியல் துறை உதவி பேராசிரியர் கோவிந்தன் கூறுகையில், ‘இந்த புழுக்கள் புதிய வகையாக உள்ளதால், பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது,’ என்றார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ‘இந்த புழுக்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு மருந்துகள் வருவதற்குள், சாகுபடியே முடிந்து விடும். ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ₹40 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். தற்போது, பரிந்துரைத்துள்ள மருந்தின் விலை மிகவும் அதிகம். அவற்றை வாங்கி பயன்படுத்துவதற்குள், மாங்காய்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு விடும். எனவே, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்து, மருந்துகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேலும், இந்த புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories:

>