அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் கொலை.. டெரிக் சாவ்வின் குற்றவாளி என தீர்ப்பு : 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சாவ்வின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மே 25ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் மினபோலிஸ் நகரில் ஆப்பிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை காவல் அதிகாரி டெரிக் சாவ் என்பவர் விசாரணைக்கு அழைத்தார். காரில் ஏற மறுத்ததை அடுத்து ஜார்ஜ் பிளாய்ட்-ஐ கீழே தள்ளிய காவல் அதிகாரி டெரிக், அவரது கழுத்தில் நீண்ட நேரம் முழங்காலை வைத்து அழுத்தி கைது செய்ய முயன்றார்.

இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சில நிமிடங்களில் 45 வயதான ஜார்ஜ் பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட நிகழ்வு அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்களுக்கு வித்திட்டது. இதனையடுத்து காவல் அதிகாரி டெரிக் சாவ்வின் உள்ளிட்ட 4 போலீசார் கைது செய்யப்பட்டதுடன் பணி நீக்க நடவடிக்கைக்கு  ஆளாகினர். இதன் பிறகு ஜார்ஜ் பிளாய்ட் அவர்களின் குடும்பத்தினர் டெரிக் சாவ்வின் உட்பட 4 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். மினசோட்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் முடிவில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், காவல் அதிகாரி டெரிக் சாவ்வின் குற்றவாளி என்று அறிவித்தனர். தீர்ப்பை வரவேற்று ஜார்ஜ் பிளாய்ட்-ன் உறவினர்கள் ஆரவாரம் செய்தனர்.மேலும் குற்றவாளி டெரிக் சாவ்வினுக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிறவெறி செயல்களுக்கு எதிரான தீர்ப்பை முழுமனதோடு வரவேற்பதாக கூறியுள்ளார். தம்மால் மூச்சு விட முடியவில்லை என்ற குரலை எளிதில் மறந்துவிட முடியாது என்று பிடன் அறிவித்துள்ளார்.

Related Stories:

>