×

நடிகர் விவேக்கிற்கு முழுக்க முழுக்க இதயம் தொடர்பான பிரச்சனைதான்; கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை...மருத்துவர் விளக்கம்.!!!

சென்னை: நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். நேற்று காலை கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், கொரோனா தடுப்பூசியில் பின்விளைவு இல்லை என்பதை உணர்த்துவதற்காகவும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நகைசுவை நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
 
தொடர்ந்து இன்று காலை முதலே திரைப்பட படப்பிடிப்பில் இருந்து வந்த நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், இன்று மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரைதுறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய மருத்துவர், இன்று காலை 11 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு நடிகர் விவேக் அழைத்து வரப்பட்டார். நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விவேக் இதயத்தில் 100 சதவீதம் அடைப்பு உள்ளது. இதயத்தில் இருந்த 100 சதவீத அடைப்புக்கு ஆஞ்சியோ மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விவேக்கிற்கு முழுக்க முழுக்க இதயம் தொடர்பான பிரச்சனைதான் உள்ளது. விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்றார்.

மேலும், கூறுகையில், விவேக்கின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். விவேக்கின் உடல்நிலை தற்போது வரை அபாய கட்டத்திலேயே உள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி:

நடிகர் விவேக் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார். மிகவும் நல்லெண்ணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். மாரடைப்பு என்பது ஒருநாளில் ஏற்படாது என மருத்துவர்கள் கூறினர். நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் மனவேதனை அளிக்கிறது. RT-PCR பரிசோதனை, சி.டி.ஸ்கேனிலும் விவேக்கிற்கு கொரோனா தொற்று இல்லை என்றார்.

விவேக்கிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். விவேக் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது உண்மைதான். உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளது. 24 மணி நேரத்திற்கு பிறகு தான் விவேக் உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.


Tags : Vivek , For actor Vivek it was a whole heart-related problem; Corona vaccine does not cause heart attack ... doctor's explanation. !!!
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...