×

முதல்வர் பிறந்தநாள் விழாவையொட்டி மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு

மேலூர்: மேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழாவை மதுரை மாவட்ட திமுகவினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக வடக்கு மாவட்டம் மேலூர் தொகுதி சார்பில் மேலூர் – சிவகங்கை சாலையில், நேற்று மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த போட்டியில் காளைகள் பங்கேற்றன. பெரிய மாடுகள் பிரிவில் 18 ஜோடிகள் கலந்து கொண்டன. இவற்றுக்கு எல்கையாக சென்று திரும்ப 12 கி.மீ தூரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.இதில் முதல் பரிசான ரூ.2,00,070ஐ புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கே.ஏ.அம்பாள் மாடுகளும், 2ம் பரிசான ரூ.1,50,070ஐ தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் விஜயகுமார் மாடுகளும், 3ம் பரிசான ரூ.1,00,070ஐ திருநெல்வேலி மாவட்டம் மாநில காளைகள் வளர்ப்போர் நல சங்க தலைவர் வேலங்குளம் கண்ணன் மாடுகளும், 4ம் பரிசான ரூ.25,070ஐ தளவாய்புரம் பரமசிவம் மாடுகளும் பெற்றது. சிறிய மாடுகள் பிரிவில் 33 ஜோடிகள் கலந்து கொண்டதால், அது இரு பிரிவாக பிரித்து நடத்தப்பட்டது. இவற்றுக்கு எல்கையாக 9 கி.மீ தூரமாக இருந்தது. இதில் முதல் சுற்றில் 17 ஜோடிகளும் இரண்டாவது சுற்றில் 16 ஜோடிகளும் பங்கேற்றன. இவற்றில் முதல் பரிசுகளை சிவகங்கை மாவட்டம் ஏரியூர் பெத்தாட்சி அம்பலம் மற்றும் தூத்துக்குடி சண்முகபுரம் விஜயகுமார் ஆகியோரின் மாடுகள் பெற்றன. இரண்டாம் பரிசை தூத்துக்குடி மாவட்டம் துரைசாமிபுரம் சுரேஷ்குமார் மற்றும் மதுரை மாங்குளம் தெய்வேந்திரன் அம்பலம் ஆகியோரின் மாடுகள் வென்றன.போட்டிகளில் மூன்றாம் பரிசுகளை சிவகங்கை மாவட்டம் தானாவயல் வெங்கடாசலம், இலங்கிபட்டி அர்ஜூனன் மாடுகளும், நான்காம் பரிசினை தூத்துக்குடி சண்முகபுரம் விஜயகுமார், திருச்சி மாவட்டம் செந்தில் பிரசாத் ஆகியோரின் மாடுகள் வென்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் நேருபாண்டியன், மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, நகர் அவை தலைவர் மார்க்கெட் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, நகர் பொருளாளர் ரவி, துணை செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி முருகன், நகராட்சி துணைத்தலைவர் இளஞ்செழியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, முன்னாள் நகர்மன்ற தலைவர் கொன்னடியான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகுபாண்டி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் முருகானந்தம், எழில்வேந்தன், சந்தோஷ்குமார், வடக்கு ஒன்றிய பொறியாளர் அணி சசிகுமார், அட்டப்பட்டி குமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்….

The post முதல்வர் பிறந்தநாள் விழாவையொட்டி மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kolakalam ,Minister ,P. Murthy ,Mellur ,Chief Minister ,M.K.Stal ,DMK ,Kolagalam minister ,
× RELATED கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில்...