கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இறந்தவர்களின் உடல்களால் நிரம்பி வழியும் தகன மேடைகள்

சூரத்: கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் உடலை திறந்தவெளியில் எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள். மறுபுறம கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களால் நிரம்பி வழியும் தகன மேடைகள். இது தான் வடமாநிலங்களின் தற்போதைய நிலை.

நாளுக்கு நாள் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பதால் உடல்களை எரியூட்டக்கூட இடமில்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இறந்தவர்களின் உடல்களோடு உறவினர்கள் பல நாட்கள் காத்திருக்கும் சூழல் உண்டாகியுள்ளது. சில இடங்களில் தகன மேடைகள் கிடைக்காமல் திறந்த வெளியிலேயே உடல்கள் எரிக்கப்படுகின்றன.

குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் திறந்தவெளியில் சடலங்கள் எரிக்கப்படும் காட்சி சமூக தளங்களில் வெளியாகியுள்ளது. தகன மேடைகளில் இடம் கிடைக்காததால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அகமதாபாத், பரோடா, ராஜ்கோட் ஆகிய முக்கிய நகரங்களிலும் தகன மேடைக்காக ஏராளமான சடலங்கள் காத்திருக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலும் கொரோனா மரணங்கள் அதிகரிக்கும் நிலையில் பிணவறைகளில் சடலங்கள் குவிந்து வருகின்றன. இவற்றை தகனம் செய்து முடிக்கும் முன் அடுத்தடுத்து சடலங்கள் வந்துவிடுவதால் மருத்துவ பணியாளர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கொரோனாவால் உயிரிழந்த 100க்கும் அதிகமானவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் எரியூட்டப்பட்டன. போபாலில் பாத்படா என்ற பகுதியில் கொரோனாவால் உயிரிழந்த 133 பேரின் உடல்கள் திறந்த மைதானத்தில் எரியூட்டப்பட்டன. 3 நாட்களில் 133 பேரின் உடல்களை எரியூட்டியதாக கூறிய ஊழியர்கள் தங்கள் உறவுகளுக்கு முறையான இறுதிச்சடங்குகளை கூட செய்யமுடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Related Stories:

>