×

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும், ‘ரெம்டெசிவிர்’ மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2 அலை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால், பாதிப்பும் பலியும் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும், ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2வது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதிகளவிலான நோயாளிகள் சிகிச்சைக்கு வருவார்கள் என்ற கணிப்பில் தனியார் மருத்துவமனையில் இதை அதிகளவில் வாங்கி பதுக்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடைகளில் ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்கப்படும் இந்த மருந்துக்கு, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் இருந்து ரூ.4,500 வரை வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 11ம் தேதி நிலவரப்படி, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 11.08 லட்சமாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இந்த பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால், ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், இதன் ஏற்றுமதிக்கு மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தடை விதிக்கப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ‘ஜிலீட் சயின்சஸ்’ என்ற நிறுவனத்தின் கண்டுபிடிப்பான ‘ரெம்டெசிவிர்’ மருந்தை, இந்தியாவை சேர்ந்த 7 மருந்து நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வருகின்றன. இவை மாதத்துக்கு 38.80 லட்சம் மருந்தை தயாரிக்கும் திறனை பெற்றுள்ளன.

பதுக்கலை தடுக்க கண்காணிப்பு
மத்திய அரசு தனது உத்தரவில் மேலும், ‘ரெம்டெசிவிர் மருந்தை தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள், தங்கள் மருந்தின் விநியோகப்பாளர்கள், கையிருப்பாளர்களின் முழு விவரத்தையும் தங்களின் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த மருந்து கையிருப்பு வைப்பதில் முறைகேடுகள் நடப்பதையும், பதுக்கப்படுவதையும், கள்ளச்சந்தையில் விற்கப்படுவதையும் தடுக்க, அரசு அதிகாரிகள், மருந்து ஆய்வாளர்கள் அடிக்கடி ஆய்வுகள் நடத்தி, கண்காணிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Ban on exports of Remdecivir used for corona treatment: Federal order
× RELATED விமானப்படை வாகனம் மீது பயங்கரவாதிகள்...