×

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தமிழக-கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை தீவிரம்: இ-பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

ஓசூர்: கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் அடுத்த ஜூஜூவாடியில், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய இ-பாஸ் இல்லாமல் வந்த வெளிமாநில வாகனங்களை திருப்பி அனுப்பினர். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தொடர்ந்து, அனைத்து மாநில எல்லைகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு, தமிழகத்திலிருந்து பொது போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் இந்த 3 மாநிலங்களுக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் அருகே ஜூஜூவாடியில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி அல்லாத பிற மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் தமிழகத்திற்குள் வந்த வாகனங்களை சோதனை செய்து, திருப்பி அனுப்பினர். மேலும் மாஸ்க் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டும், கூட்டமாக வாகனங்களில் வருபவர்கள் இறக்கி விடப்பட்டும் வருகின்றனர். அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்கிறார்களா என்பதையும் கண்காணித்தனர்.

Tags : Corona ,Tamil Nadu ,Karnataka , Corona Prevention Measures Vehicle Audit Intensity on Tamil Nadu-Karnataka Border: Denial of Permission for Vehicles Without E-Pass
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...