×

500 கூகுள் ஊழியர்கள் கதறல் பாலியல் தொல்லை தருபவர்களை காப்பாற்றுவதை நிறுத்த வேண்டும்: சுந்தர் பிச்சைக்கு திறந்த கடிதம்

வாஷிங்டன்: ‘பாலியல் புகார் தரும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு பதிலாக தொல்லை தருவோரை காப்பாற்றுவதை நிறுத்துங்கள்’ என கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சைக்கு 500 ஊழியர்கள் திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.
உலகிலேயே பணி செய்திட மிகவும் சவுகரியமான நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் கருதப்படுகிறது. நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகளை அந்நிறுவனம் வழங்குகிறது. ஆனாலும், பெண் ஊழியர்கள் பாலியல் பாதிப்புக்கு உள்ளாவதாக அடிக்கடி புகார் எழுவது கூகுளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், கூகுள் நிறுவன முன்னாள் பெண் பொறியாளர் எமி நியட்பெல்ட் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், ‘நான் பாலியல் புகார் கொடுத்த நபருடனே என்னை நேருக்கு நேர் மீட்டிங்கில் பங்கேற்க கூகுள் நிறுவனம் நிர்பந்தித்தது. அந்த நபர் என் பக்கத்து சீட்டிலேயே அமர்ந்து தொடர்ந்து பணி செய்தார். எனவே, தர்மசங்கடத்தில் வேலைவிட்டு வெளியேறினேன்,’ என கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தை சேர்ந்த 500 ஊழியர்கள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘ஆல்பாபெட் (கூகுளின் தாய் நிறுவனம்) பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக புகாருக்கு உள்ளானவரை காப்பாற்றுகிறது. புகார் கொடுத்தவர் மீது சுமை ஏற்றப்பட்டு, அவர் வேலையை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறது. அதே சமயம் புகாருக்கு உள்ளானவருக்கு வெகுமதிகள் அளிக்கப்படுகின்றன. பாலியல் தொந்தரவு குறித்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராடியும் ஆல்பாபெட் மாறவில்லை. தொல்லை தரும் நபர்கள் இல்லாத இடத்தில் பணிபுரிய கூகுள் ஊழியர்களுக்கு உரிமை உண்டு. கூகுள் நிறுவனம் அதற்கு முன்னுரிமை அளித்து பாதுகாக்க வேண்டும்,’ என கூறியுள்ளனர்.

Tags : Google ,Sundar Pichai , 500 Google employees must stop protecting sexual harassment: Open letter to Sundar Pichai
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்