மதுரை திருமங்கலத்தில் டீயில் போதை மருந்து கலந்து கைதிகளுக்கு சப்ளை: 2 போலீசார் கைது

திருமங்கலம்: திருமங்கலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வந்தபோது, கைதிகளுக்கு டீயில் போதை மாத்திரை கலந்து கொடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் நடந்த பெண் கொலை தொடர்பாக அழகுசேது, அஜய், சதீஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இவர்களை திருமங்கலம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் செய்வதற்காக, ஆஸ்டின்பட்டி போலீசார் நேற்று முன்தினம் அழைத்து வந்தனர்.

அப்போது, கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள தாலுகா அலுவலகம் அருகே, கைதிகளை பார்க்க அழகுசேதுவின் தம்பி அழகுகோபி (19), அவரது உறவினர் துவரிமான் பிரேம்குமார் (21) ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் இருவரும் கைதிகளுக்கு டீ வாங்கி தந்துள்ளனர். அப்போது டீயில் எதையோ கலந்து கொடுக்கவே, பாதுகாப்பிற்கு வந்த போலீசார் சந்தேகம் அடைந்து விசாரித்தனர். இதில், அழகுகோபி, பிரேம்குமார் ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால், கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட டீயை வாங்கி போலீசார் பரிசோதனை செய்ததில், அதில் போதை மாத்திரைகள் கலந்தது தெரியவந்தது.

உடனே பாதுகாப்பு போலீசார் அழகுகோபி, பிரேம்குமார் ஆகியோரை பிடித்து, திருமங்கலம் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த டவுன் போலீசார், அழகுகோபியிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு எங்கிருந்து போதை மாத்திரை கிடைத்தது? யார் சப்ளை செய்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட அழகுகோபி மதுரையில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>