×

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கும் தட்டுப்பாடு: தனியார் மருத்துவமனைகள் பதுக்கல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை தனியார் மருத்துவமனையில் வாங்கி பதுக்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா 2வது அலை, உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இது தற்போது இந்தியாவிலும் மிக வேகமாக பரவுகிறது. வழக்கம் போல், இந்தியாவில் கொரோனா பரவல், பாதிப்பு, பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இது கடந்தாண்டை விட கூடுதலாக இருப்பதாக கூறப்படுகிறது.
நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பஞ்சாப், சட்டீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றன. மத்திய அரசு உறுதி அளித்த டோஸ்களை வழங்கவில்லை என்று புகார் தெரிவிக்கின்றன.

இது தவிர, போதிய அளவிலான தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க முடியாமல் திணறுவதால் தான், சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் இதற்கான காலாவதி காலத்தை 3 மாதங்கள் நீட்டி அளிக்கும்படி கோரிக்கை விடுத்ததாக செய்தி வெளியாகியது. தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பரபரப்பு அடங்கும் முன்பாக, கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கும் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ‘ரெம்டெசிவிர்,’ மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், இந்த மருந்து சப்ளைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் இவற்றை அதிகளவில் வாங்கி பதுக்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மருந்தை தனியார் மருத்துவமனைகள் 10 சதவீதத்துக்கும் அதிகமாக பயன்படுத்துகின்றன. அரசு மருத்துவமனைகளில் 30% மட்டுமே பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. எனவே, 2 அலை வருவதை அறிந்து முன்கூட்டியே இந்த மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கி பதுக்கி விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பிரச்னைக்கான தீர்வை மத்திய சுகாதார அமைச்சகம் காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Shortage of Remdecivir given to corona patients: Private hospitals hoarding
× RELATED நாடு முழுவதும் இளநிலை...