×

இறந்த செல்களை அகற்றி உடலுக்கு ஆரோக்கியம் தரும் புற்று மண் குளியல்: அரியலூரில் விநோதம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் மண் குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இயற்கை மருத்துவ ஆர்வலர்கள் பங்கேற்று மண் குளியல் சிகிச்சை எடுத்து கொண்டனர். இதுகுறித்து கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்க செயலாளர் தங்க சண்முகசுந்தரம் கூறுகையில், மண் குளியல் வெயிலுக்கு, உடலுக்கு நல்ல சிகிச்சையாகும். இது எளிமையான மருத்துவமாகும். கரையான் புற்று மண், களிமண் அல்லது செம்மண் எதுவாக இருந்தாலும் எடுத்து கொள்ளலாம்.

மேலும் முதல் நாளே தண்ணீர் விட்டு கொழகொழப்பாக இருப்பதுபோல பக்குவமாக தயார் செய்து காலை இளம்வெயிலில் உடல் முழுவதும் பூசி கொள்ள வேண்டும். பின்னர் குளித்தால் உடலில் இறந்த செல்கள் வெளியேறும். புதிய செல்கள் உருவாகும். இயற்கை நமக்கு கொடுத்த மருந்துகள் ஏராளம். நாம் அனேக இடங்களில் கரையான் புற்றுகளை பார்த்திருப்போம். கரையான் புற்றுமண் உடலுக்கு மிகவும் நல்லது. இடிந்துபோன புற்றில் உள்ள மண்ணை எடுத்து பாட்டிலில் சேகரித்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து மறுநாள் அந்த மண்ணை உடலில் பூசி கொண்டு இளம்சூடான வெயிலில் முக்கால் மணி நேரம் உடலை காண்பிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தோலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் தேங்கியிருக்கும் இறந்துபோன செல்களை அகற்றுகிறது. உடலில் பல நாட்களாக தங்கியுள்ள அழுக்குகளை நீக்குகிறது. உடலில் உள்ள யூரியா அளவை சரி செய்கிறது.

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இந்த குளியலை அவ்வப்போது எடுத்து கொள்ள வேண்டும். கரையான் புற்று மண்ணை சேகரித்து கொண்டு இதனுடன் சிறிது பூண்டு, சிறிது கல் உப்பு சேர்த்து மைபோல அரைக்க வேண்டும். அரைத்து வைத்த இந்த கலவையை இளம்சூடாக காய்ச்ச வேண்டும். பின்னர் இந்த கலவையை மூட்டுவலி உள்ளவர்கள் பற்று போடலாம். 3 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் மூட்டுவலி முற்றிலுமாக நீங்கி விடும். உடலில் எந்த பகுதியில் அடிபட்டாலும் இந்த வைத்தியத்தை மேற்கொள்ளலாம் என்றார்.



Tags : Arialur , Cancer bath that removes dead cells and gives health to the body: Strange in Ariyalur
× RELATED அரியலூரில் தனியார் பட்டாசு ஆலையில்...