×

600 வீடுகளில் பரிசோதனை கோட்டூர்புரத்தில் 13 பேருக்கு கொரோனா அறிகுறி: தனிமைப்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை கோட்டூர்புரம், சித்ரா நகர் பகுதியில் 600 வீடுகளில் நேற்று பரிசோதனை நடத்தப்பட்டதில் 13 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையிலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் வீடுவீடாக சென்று பரிசோதனை செய்யும் நடைமுறை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நேற்று முன்தினம் மட்டும் 1459 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சென்னை முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு சோதனை செய்யப்பட்டு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மேலும் வீடுவீடாக சென்று சோதனை செய்யும் நடைமுறையும் நேற்று முதல் தொடக்கப்பட்டுள்ளது. கொரோனா சோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நேற்று கோட்டூர்புரம், சித்ரா நகர் பகுதியில் 600 வீடுகளில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 13 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சோதனையின் முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Kotturpuram , Testing in 600 homes Coronary symptoms in 13 people in Kotturpuram: Doctors' advice to isolate
× RELATED தமிழச்சி தங்கபாண்டியன் ஒட்டுமொத்த...