×

கொரோனா 2ம் அலை எதிரொலி: புதிய கட்டுப்பாடுகளை தமிழக மக்கள் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தல்.!!!

சென்னை: கொரோனா தடுப்பு விதிமுறைகளை தமிழக மக்கள் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பரவிய கொரோனா முதல் அலை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது அலையானது ஒரு நாள் பாதிப்பில் 1 லட்சத்துக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மக்களிடையே மீண்டும் அச்சம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று அறிவித்தது. அதன்படி, கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை செய்யப்படுகிறது. கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் செயல்பட தடை. திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும். தேனீர் கடை மற்றும் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பாதிப்பின் 2-வது அலையால் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் காக்க வேண்டும்.
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தகுதி உடையவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா 2ம் அலை காரணமாக முதியவர்களை குடும்பத்தினர் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.



Tags : Governor ,Panwaril Prokid , Echo of Corona 2nd wave: Governor Banwarilal Purohit instructs the people of Tamil Nadu to follow the new restrictions !!!
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...