சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை தந்த நீதிபதி குன்ஹா ஓய்வு பெற்றார்: தலைமை நீதிபதி பாராட்டு

பெங்களூரு: சொத்து குவிப்பு வழககில் ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஜான்மைக்கல் டி குன்ஹா ஓய்வு பெற்றார். கர்நாடக மாநிலம், மங்களூரு மாவட்டம், குருபுரபேட்டை கிராமத்தில் கடந்த 1959 ஏப்ரல் 7ம் தேதி பிறந்தவர் ஜான்மைக்கல் டி.குன்ஹா. சட்ட கல்வி முடித்தபின் மங்களூருவில் வக்கீலாக பணியாற்றிய அவர் கடந்த 1999ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வக்கீல தொழில் ஆரம்பித்தார். கடந்த 2002ம் ஆண்டு மாவட்ட அமர்வு நீதிபதியாக நியமனம் செய்தபின் பெங்களூரு, பல்லாரி மற்றும் தார்வார் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றினார்.

பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தனி நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2014ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரணை நடத்திய 2014 செப்டம்பர் 27ம் தேதி வழங்கிய தீர்ப்பில் அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் குற்றவாளியாக உறுதி செய்து தீர்ப்பு வழங்கினார். அவர் வழங்கிய தீர்ப்பை கடந்த 2017 பிப்ரவரி 14ம் தேதி உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

அதை தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2016 நவம்பர் 14ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்ற தற்காலிக நீதிபதியாகவும் பின் 2018 நவம்பர் 11ம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக 4 ஆண்டு காலத்தில் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கிய அவர், நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவருக்கு பெங்களூரு வக்கீல் சங்கம் சார்பில் வழியனுப்பு விழா நடந்தது. இதில் பேசிய கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ``ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரணை நடத்தி குற்றவாளியாக தீர்மானித்து அவர் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது,’’ என்றார்.

Related Stories:

>