×

பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தார் அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது: வாக்களித்த பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று, வாக்களித்த பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களிப்பதற்காக காலை 7.50 மணி அளவில் எஸ்ஐஇடி கல்லூரிக்கு வந்தார். அவருடன் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளருமாகிய உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வந்தனர். வாக்களிப்பதற்காக மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்றார்.  அப்போது அங்கிருந்த தேர்தல் அதிகாரி, வரிசையில் நிற்க வேண்டாம். முன்பாக சென்று வாக்களிக்குமாறு  தெரிவித்தார். அதை மு.க.ஸ்டாலின் மறுத்து, பொதுமக்களோடு பொது மக்களாக வரிசையில் நின்று வாக்களிப்பதாக கூறி வரிசையில் நின்றார். சரியாக 8.13 மணி அளவில் தனது வாக்கை பதிவு செய்தார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும் தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் பெண்கள் வரிசையில் நின்று துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்களித்தனர். பின்னர், கல்லூரி வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  எங்களது ஜனநாயகக் கடமையை நாங்கள் ஆற்றி இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் மக்கள், அமைதியாக, ஆர்வத்துடன் வாக்களித்துக் கொண்டிருப்பதாக எனக்குச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயகக் கடமையை மக்கள் முறையாக ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2ம் தேதி சிறப்பாக இருக்கும். அது உறுதி. இவ்வாறு அவர் பதிலளித்தார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதிலும் வருமாறு:
மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருகிறார்கள். இதை எப்படி பார்க்கிறீங்க?.

ஆளும் கட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணர்கிறேன். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தியாக இருக்கிறதா? திருப்தி என்றும் சொல்ல முடியாது. அதிருப்தி என்றும் சொல்ல முடியாது. தி.மு.க. கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்னைவிட ஊடகங்களில் இருக்கும் உங்களுக்குத்தான் அதிகமாகத் தெரியும். நீங்களே சொன்னால் மகிழ்ச்சியடைவேன். உங்கள் தொகுதி உட்பட முக்கிய தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதே? அது ஆளும்கட்சியின் தூண்டுதல். தோல்வி பயம் வந்துவிட்டதால், எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் அவர்கள் ஈடுபட்டார்கள். அதற்குத் தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை என்ற செய்தியும் தொடர்ந்து கிடைத்தது.

பல இடங்களில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகப் புகார்கள் வருகின்றதே? தேர்தல் ஆணையம்தான் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதையும் மீறி முறியடித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் கலைஞரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோார் உடனிருந்தனர்.



Tags : BC ,Q. ,Stalin , AIADMK fears defeat: MK Stalin interviewed after vote
× RELATED ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு